மேல் மாகாணத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் இரண்டாம்  திகதி காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்து வருவதை அடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. எனினும் அதன் தொடர்ச்சியாகவே தற்போது ஊரடங்குச்சட்டம் மேல் மாகாணம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கான முக்கிய காரணிகளில் மற்றுமொன்று சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமனித இடைவெளி என்பனவற்றை முறையாக பின்பற்ற  மக்கள் தவறியமையேயாகும்.

குறிப்பாக நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மட்டக்குளி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆமர் வீதி, மருதானை ஆகிய பகுதிகளில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த பகுதிகளில் வீதிகள் மற்றும் வாகனங்களில் வைத்து மரக்கறி வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன்போது சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்கவில்லை.

குறிப்பாக ஒவ்வொருவரும் முகத்துக்கு நெருங்கிய நிலையிலேயே பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.  இவ்வாறானதோர் சூழலில் ஊரடங்குச்சட்டம் கூட அர்த்தமற்றதாக போய்விடுகின்றது.

தற்பொழுது தோன்றியிருக்கும் கொத்தணிப் பரவலானது மேலும் பரவுமானால் முழு நாடுமே பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறந்து போகக் கூடாது . 

வெறுமனே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதற்காக முண்டியடித்துக்கொண்டு பொருட்களைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. அனைத்துக்கும் முன்னர் நாம் எம்மையும் எமது குடும்பத்தையும் எமது சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் உருவாகவேண்டும்.

உண்மையில் யார்? யாருக்கு ? கொரோனா தொற்று உள்ளது என்ற விடயம் தெரியாத நிலையில் அதனை கண்டறியவும் தடுத்து நிறுத்தவும் சுகாதாரத்துறையினரும் அரசாங்கமும் இதர அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிர்க் கொல்லியாக மாறி இருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் உணராமல், மக்கள் நடந்து கொள்வது மிகவும் கவலைக்குரியதாகும்.

மேலும் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே இந்த ஊரடங்குச் சட்டத்தின் போதும் அதனை தொடர்ந்தும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும்.

இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யவும் மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளவும் வாரத்தில் இரு தினங்கள் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்துக் கடைகள் திறக்கப்படவுள்ளன.

களுத்துறை, கம்பஹா மாவட்டங்களுக்கு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை  கடைகள் திறந்திருக்கும்.

அதே போன்று கொழும்பு, குருநாகல் மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை மேற்படி வர்த்தக நிலையங்கள் மருந்தகங்கள் திறந்திருக்கும்.

எனவே மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை. கூடுமானவரை நாம் நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுடன் மற்றவர்களின் பாதுகாப்பு குறித்தும் அவதானமாக இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்