இலங்கையின் 18 ஆவது விமானப் படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய விமானப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷன பத்திரன எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

2019 மே மாதம் 29 ஆம் திகதி இலங்கையின் 17 ஆவது விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

இந் நிலையிலேயே அந்தப் பதவிக்கு சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 36 வருட சேவையை நிறைவுசெய்த ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இதன்போது தாய்நாட்டுக்காக செய்த பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, சுமங்கள டயஸ்ஸின் ஓய்வுகால வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

முப்பது வருட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய அவர் தனது சேவைக் காலத்தில் வடமராட்சி நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி சேவா பதக்கம், தேசபுத்ர விருது, ரணசூர விருது (மூன்று முறை), வடக்கு கிழக்கு நடவடிக்கைகள் பதக்கம், உத்தம சேவா பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷணய உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.