"ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம் எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை"  என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

ஜப்பான் மற்றும் இந்தியா இலங்கையில் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களை சீனாவிற்கு வழங்கியமை குறித்து அமெரிக்கா அதிருப்தியானதும் சந்தேக நோக்குடனுமே உள்ளது. இதனை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இலங்கை விஜயத்தின் போது சீனாவை விமர்சித்தது போன்று மனித உரிமைகள் குறித்தும் நினைவூட்டினார். எனவே எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அந்நாட்டின் தேசிய கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. 

China is a predator, Mike Pompeo tells Sri Lanka - World News

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் எமது இராஜதந்திர தொடர்புகளும் அணுகுமுறைகளும் எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்களின் ஆட்சியில் சீன சார்பு என்று இலங்கை அநாவசியமாக அடையாளப்பட்டது.

இதுவே இன்றைய நெருக்கடிகளுக்கும் காரணமாகியுள்ளது. எனவே அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயத்தை அரசாங்கம் எளிதாக எடுத்துக்கொள்ளாது இராஜதந்திர ரீதியில் சிறப்பாக அணுக வேண்டும். குறிப்பாக எம்.சி.சி ஒப்பந்தம் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு மாறுப்படாது என்றார்.