ராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துவிட்டது.

இதன் விளைவாக சுமார் 20,000 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பான முடிவை எடுப்பதில் தாமதம் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என  கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம்  தெரிவித்துள்ளது.

செயலிழந்த பி.சி.ஆர். இயந்திரம் குறித்த தகவல்கள் நேற்று சுகாதார அதிகாரிகள் மற்றும் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மைய உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பின்போது வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இராணுவத் தளபதி சவேந்ர சில்வா செயலிழந்த பி.சி.ஆர். இயந்திரத்தை திருத்துவதற்கான உடன் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து நிபுணர்கள் வரழைக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.