13 ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்களானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே - ஒப் சுற்றுக்கு நுழைய ஆறு அணிகள் முட்டி மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே-ஒப் சுற்றை உறுதி செய்திருக்கிறது. 

மீதமுள்ள 3 பிளே-ஒப் சுற்று இடத்துக்கு 6 அணிகள் முட்டி மோதுகின்றன. இதனால் இறுதி ஆட்டங்களின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மும்பை

12 போட்டிகளில்  8 இல் வெற்றிகளை குவித்துள்ள மும்பை அணி ரன்ரேட்டில் (+1.186) திடமாக இருப்பதால் அந்த அணியின் பிளே-ஒப் இடத்துக்கு ஆபத்து இல்லை. எஞ்சிய 2 போட்டிகளிலும் (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்குள் வந்து விடலாம்.

 

பெங்களூரு

14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக) உள்ளன. இவற்றில் ஒன்றில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 

டெல்லி

கம்பீரமாக பயணித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முக்கியமான கட்டத்தில் சிக்கி நிற்கிறது. இறுதி 3 போட்டிகளிலும் வரிசையாக தோல்வி அடைந்ததால் இப்போது பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி அணி இறுதி 2 போட்டிகளில் (மும்பை, பெங்களூருக்கு எதிராக) வென்றாக வேண்டும். குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்றால் தான் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

கொல்கத்தா 

12 போட்டிகளில்  6 இல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி ரன்ரேட்டில் (-0.479) பின்தங்கியுள்ளது. அதனால் இறுதி 2 போட்டிகளிலும் (சென்னை, ராஜஸ்தானுக்கு எதிராக) பாரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஒன்றில் தோற்றாலும் வாய்ப்பு நழுவிப் போகும்.

பஞ்சாப்

12 புள்ளிகளுடன் 4 ஆவது இடம் வகிக்கும் பஞ்சாப் அணி ரன்ரேட்டை சரிய விடாமல் இறுதி 2 போட்டிகளிலும் (ராஜஸ்தான், சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றால் போதுமானது. இதில் ஒன்றில் கோட்டைவிட்டால் ஏனைய அணிகளின் சாதகமான முடிவுக்காக காத்திருக்க வேண்டியது இருக்கும்.

ஐதராபாத்

12 போட்டிகளில் 5 இல் வெற்றி, 7 இல் தோற்றுள்ள ஐதராபாத் அணி இறுதி 2 ஆட்டங்களிலும் (பெங்களூரு, மும்பைக்கு எதிராக) முதலில் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் கடைசி கட்ட போட்டிகளில் தோற்க வேண்டும். அப்போது தான் ஐதராபாத் அணிக்கு ‘பிளே-ஒப்’ கதவு திறக்கும். டெல்லி அணி தங்களது எஞ்சிய இரு லீக்கிலும் தோல்வியைத் தழுவினால் அது ஐதராபாத்துக்கு இன்னும் வாய்ப்பாக அமையும்.

ராஜஸ்தான்

10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இறுதி 2 லீக்கில் (பஞ்சாப், கொல்கத்தாவுக்கு எதிராக) வெற்றி காண வேண்டும். ஆனால் ராஜஸ்தானின் ரன்ரேட் (-0.505) மோசமாக இருப்பதால் கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் தங்களது இறுதிகட்ட போட்டிகளில் தோல்வியைத் தழுவினால் தான் ராஜஸ்தானால் அணி ‘பிளே-ஒப்’ சுற்றை நினைத்து பார்க்க முடியும்.

Photo Credit : ‍ IPL