அமெரிக்காவின் இராஜாங்க செயலர் மைக்பொம்பியோவின் திடீர் இலங்கை விஜயம் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது .

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்த அவர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உட்பட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

தனது இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ,

இலங்கை  - அமெரிக்க  உறவை வலுப்படுத்துவதுடன்  இலங்கையின் இறையாண்மை, சுயாதிபத்தியம் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் என்று தெரிவித்துள்ளதுடன் சீனாவின் நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனால் எமது நோக்கம் இதுவே என்று அழுத்தி உரைத்துள்ளார்  .

அத்துடன் நீதி வழங்கல் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவை தொடர்பில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனைத்  தொடர்ந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கும் விஜயம் செய்து அங்கு நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார் .இந்நிலையில் அவரது இலங்கை விஜயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

பொம்பியோவின் விஜயமானது இந்து சமுத்திரத்தின் கடல்சார் அதிகாரங்களை அமெரிக்கா வசப்படுத்துவதே நோக்கமாகக்கொண்டது என்று ஜே .வி .பி யின் தலைவர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளதுடன், இந்தியா, சீனா ,அமெரிக்கா என பல நாட்டு இராஜதந்திரிகள் வந்து செல்கின்றனர். அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட யோசனை என்ன ?  என்பதை பகிரங்கமாக கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளார் . எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பான பணிக் குழுவின் தலைவராகவும் அவர் செயற்படுகின்றார் . எனவே அவரது வருகை தொடர்பிலான உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் ?  என ஐக்கிய மக்கள் சக்தியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவை அனைத்துக்கும் மத்தியில் அமெரிக்க - சீன இராஜதந்திரிகள் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளதையும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விரிசல்நிலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையும் காணமுடிகின்றது.

இதில் இலங்கையின் போக்கு எவ்வாறு அமையும் ?  என்பதே தற்போதுள்ள பெரும் கேள்வியாக  உள்ளது. இரண்டு நாடுகளுமே இலங்கையை தனது வலைக்குள் வளைத்துப் போட முயல்கின்றன என்பதும் அதன் அடிப்படையில் பெருந்தொகை நிதியை உதவியாக வழங்குவதாகவும்  விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்  சீன - இலங்கை நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தாங்கள்  மும்முரமாக இருப்பதாக  தெரிவித்துள்ள  சீனா,  இலங்கையுடனான இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிப்பதாக  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் சீன தூதரகம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலரின் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் சீனா குறித்த அறிவிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ சீனா ஒரு சூறையாடும் நாடு என்றும் நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுவதாகவும் கூறியதாக சீனா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடயே அமெரிக்காவின் இராஜாங்க செயலரின் இலங்கை விஜயம் ஏன் சீனாவிற்கு கசப்பானது . அவ்வாறானால் இரு நாடுகளும் இலங்கையை கையாள முயற்சிக்கின்றனரா  ? என்ற சந்தேகமும் உள்ளது. எனவே அரசாங்கம்  வெளிப்படையாக குறித்த விஜயம் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் வித்தானகே தெரிவித்தார்.

இவற்றுக்கு மத்தியில் இலங்கை தனது சுயாதீன தன்மைக்கு சிக்கல் ஏற்படாத வகையில் சர்வதேச தொடர்பை பேணிவந்துள்ள போதிலும்,  சீனா மற்றும் அமெரிக்காவின் முகாமாக இலங்கையை மாற்ற முயற்சிப்பதானது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

இலங்கை - சீனா சார்பான போக்கை கொண்டுள்ளது என்ற தோற்றப்பாடு இந்திய மற்றும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடம் இருப்பதாக நம்பப்படுகின்றது.

இவ்வாறானதோர் சூழலில் இலங்கை தனது நிலையை தெளிவுபடுத்துவதும் கடினமான காரியமாகவே இருக்கும் . சுருக்கமாகக் கூறினால் "ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் "என்ற  நிலைமையே தற்பொழுது இலங்கையை பொறுத்தமட்டில் காணப்படுகின்றது என்றே கூறவேண்டும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரிய தலையங்கம்