(எம்.மனோசித்ரா)

"உயிர்த்த ஞாயிறுதின நீதிக்காக இலங்கையுடன் என்றும் துணை நிற்போம். பல நூறு உயிர்களை காவுகொண்ட  அந்த தாக்குதல் உட்பட அடிப்படைவாத வன்முறைகளையும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது" என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கான விஜயம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று மாலை அணிவித்து வழிபட்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற இடங்களையும் பார்வையிட்டேன். பல நூறு அப்பாவி மக்களின் உயிர்கள் அந்த தாக்குதலின் போது காவுகொள்ளப்பட்டன.

வன்முறை மற்றும் தீவிரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. இந்த அடிப்படைவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் அமெரிக்கா இலங்கை மக்களுடனும் துணை நிற்கின்றது என தெரிவித்துள்ளார்.