சுமார் 12 இலட்சம் பெறுமதியுடைய கேரள கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் இருவர் புத்தளம் கரம்பை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலாவி மற்றும் புழுதிவயல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த  இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 10 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவ்விருவரும் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புத்தளம் பாலாவி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இதற்கு பின்னால் இருந்து வழிநடத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.