(எம்.மனோசித்ரா)

இந்து மா சமுத்திரத்தின்  கடல்சார் அதிகாரங்களை  அமெரிக்கா வசப்படுத்தும்  நோக்கத்திலேயே அந்நாட்டு இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

எனவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோர் அமெரிக்க இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்து நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்க இராஜாங்க செயலர் ஜனாதிபதியுடனும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுடனும் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் என்ன ? அவற்றில் எதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது ? எதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது போன்ற விடயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறியதைப் போன்று தற்போதைய அரசாங்கத்துக்கு உண்மையில் எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் விருப்பம் இல்லையென்றால் அதனை நேரடியாக அமெரிக்காவிடம் தெரிவிக்க வேண்டும்.

எனினும் தற்போது அமெரிக்காவின் தேவைக்கேற்ப செயற்படுவதற்காக மக்களை ஏமாற்றி அதில் கையெழுத்திட அரசாங்கம் முற்படுமானால் நாட்டை நேசிப்பவர்கள் அதற்கு எதிராக போராட வேண்டும் என்றார்.