சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக் குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. 

நேற்று செவ்வாய்க்கிழமை ஜெயபுரம் காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சூட்சுமமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றியவாறு பயணித்த டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட பொலிசார் அதிலிருந்து முதிரை மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.

குறித் விடயம் தொடர்பில் பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த வாகனம் பொலிசாரால்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 

இதன்போது மரக்குற்றிகளை கற்களால் மறைத்து சூட்சுமமான முறையில் கடத்த முற்றப்பட்டுள்ளமை தெரிய வந்ததையடுத்து குறித்த மரக்கடத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த டிப்பர் வாகனமும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட முதிரை மரக்குற்றிகளின் பெறுமதி 10 இலட்சம் ரூபா மதிப்புடையது எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் சந்தேக நபருக்கெதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அண்மைய நாட்களாக கிளிநொச்சி, பூநகரி, வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல்கள் தொடர்பான விசேட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.