(நா.தனுஜா)

இறையாண்மையுடைய நாடு என்றவகையில் இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை எப்போதும் நட்புறவானதும் நடுநிலையானதாகவுமே காணப்படுகின்றது.

அந்தவகையில் அமெரிக்காவுடன் நாம் தொடர்புகளைப் பேணவிரும்புவதுடன், எதிர்காலத்திலும் அந்நாட்டு பிரதிநிதிகளை எமது நாட்டிற்குள் உள்வாங்கத் தயாராக இருக்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிதைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்தார்.

அதனைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாம் இருநாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினோம்.

இருதரப்பு நல்லுறவை முன்னிறுத்திய அடுத்தகட்ட கலந்துரையாடல்களை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

மேலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, விவசாயம், புத்தாக்கம், வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

இறையாண்மையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை எப்போதும் நட்புறவானதும் நடுநிலையானதாகவுமே காணப்படுகின்றது.

அத்தோடு எமது கடல் மற்றும் ஆகாயமார்க்க பிராந்தியத்தில் அமைதியையும் அனைவருக்குமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கிறது.

அதற்கேற்றவாறு அனைத்து நாடுகளும் கடல்சார் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயற்படுவது அவசியமாகும் என்றார்.