தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறியவர் பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வந்தாறுமூலை பேக் ஹவுஸ் வீதி பகுதியில் வசிக்கும சீனித்தம்பி நடராசா (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரமேறி தேங்காய் பறித்து தொழில் செய்து தனது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளும் குடும்பஸ்தரான இவர் வழமைபோன்று நேற்றையதினம் தென்னை மரமொன்றில் ஏறி தேங்காய் பறித்துள்ளார்.

வந்தாறுமூலையிலுள்ள காணியொன்றிலிருந்த தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்து விட்டு மரத்திலிருந்து கீழிறங்கும்போது சடுதியாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

உணர்வற்றுப் போயிருந்த அவரை வைத்தியசாலையில்  அனுமதிக்க அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

எனினும் அவர் ஏற்கெனவே மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.