சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிபா நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான இன்பான்டினோ தற்போது அவரது வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வருகிறார். 

அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ அறிவுறுத்தியுள்ளது.

தொற்றுநோய் காரணமாக இன்பான்டினோ தனது பயணத்தை கடந்த நாட்களில் குறைத்திருந்தபோதிலும், இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுக்கும் இடையிலான உறவுகள் இயல்பாக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் கடந்த மாதம் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.