அறிமுகப்படுத்தப்படவுள்ள  புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு  மாகாணத்துக்கு ஐந்து  பாராளுமன்ற ஆசனங்கள் மேலதிகமாக வழங்கப்படவேண்டும்.   யுத்தத்தின் பின்னரான வடக்கை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்த பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள்  அவசியமாகும். எனவே நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

அடுத்த பாராளுமன்றத் தேர்தலானது புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். புதிய தேர்தல் முறைமையானது 65 வீதம் தொகுதி அடிப்படையிலும் 35 வீதம் விகிதாராரச அடிப்படையிலும் அமைய வேண்டும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகவும் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தேர்தல் முறை மாற்றம்  கொண்டு வரப்படும்  என ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

புதிய தேர்தல் முறை உருவாக்கம் தொடர்பாக தகவல்                       வெ ளியிடுகையிலேயே  அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த விடயம் குறித்து மேலும் குறிப்படுகையில், 

தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும். புதிய தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டு விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது அதற்காக எம்மிடம் ஆதரவு கோரிய ஐக்கிய தேசியக் கட்சியானது 20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக தேர்தல் முறை மாற்றம் செய்யப்படும் என எமக்கு வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். 

தற்போது நோர்வே நாட்டின் நிபுணர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்து இந்த தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறார். நாமும் அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் தற்போதைய தேர்தல் முறைமையானது மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. அதில் எவ்விதமான விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை. 

தேர்தல் முறைமையானது மாற்றப்பட வேண்டும். அதாவது  65 வீதம் தொகுதி அடிப்படையிலும் 35 வீதம் விகிதாசார  அடிப்படையிலும்  பதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும்.   பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகவும் இருக்கலாம். அல்லது அதனைவிட கூடிய எண்ணிக்கைக்கு கூட செல்ல முடியும். 

எவ்வாறெனினும் 65 வீத தொகுதி முறை 35 வீத பிரதேச வாரி முறை உள்ளடங்களாக புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும். அதில் விருப்பு வாக்குமுறை எக்காரணம் கொண்டும் இடம்பெறக்கூடாது. தேர்தல் முறை மாற்றப்பட்டாலும் சிறுபான்மை மக்களின் நலன் கருதி பிரதிநிதிகளின் தெரிவானது விகிதாசார அடிப்படையில் இடம்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம். 

ஆனால் அதில் விருப்பு வாக்குமுறைமை எக்காரணம் கொண்டும் இடம்பெறாது. எனவே  20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்படும் தேர்தல் முறைமையினால் சிறுபான்மை மக்களுக்கு பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாது.  

ஆனால் புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகவும் கவனமாக இருக்கிறது.  அதாவது சிறுபான்மை மக்களுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு வலயத்தை வழங்கும் வகையில் நாம் மற்றுமோர் யோசனையை முன்வைத்திருக்கிறோம். 

அதாவது அறிமுகப்படுத்தப்படவுள்ள  புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு  மாகாணத்துக்கு  பாராளுமன்ற ஆசனங்கள் மேலதிகமாக வழங்கப்படவேண்டும்.   யுத்தத்தின் பின்னரான வடக்கை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்த பிரதிநிதித்துவம் அவசியமாகும். எனவே நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றோம். 

 அடுத்துவரும் இரு பாராளுமன்ற தேர்தல்களில்   மாத்திரம் இவ்வாறு வட மாகாணத்திற்கு மேலதிகமாக ஐந்து ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என கோருகின்றோம். அதன்பின்னர் அதில் திருத்தத்தை கொண்டு வர முடியும்.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்பவே இந்த பரிந்துரையை முன்வைக்கின்றோம்.  

எது எப்படியிருப்பினும் வடமாகாணத்துக்கு மேலதிக ஆசனங்களுடன் புதிய தேர்தல் முறைமை கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் தேர்தல் முறைமையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை நாங்கள் இலகுவில் விட்டுவிட மாட்டோம். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்த விடயத்தில் எமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்புகிறோம் என்றார்.