சீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தில் நடிகராக அறிமுகமாகும் இந்திய துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதானின் தோற்ற புகைப்படம் வெளியானது.

'டிமான்டி காலனி', 'இமைக்காநொடிகள்' ஆகிய படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கோப்ரா'. இந்தப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். 

அத்துடன் கேஎஸ் ரவிக்குமார், பத்மபிரியா, கனிகா, பாபு அண்டனி, சிந்து ஷ்யாம், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்தப்படத்தில் இந்திய துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் 'அஸ்லான் இல்மாஸ்' என்ற கேரக்டரில் நடிகராக அறிமுகமாகிறார். நேற்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்திற்கான தோற்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது. கருப்பு வெள்ளையில் வில்லத்தனம் கலந்த பார்வையுடன் வெளியான அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.