இதுவரை ஒரு சில பிரதேசங்களில் மாத்திரம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும், அதேவேளை மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நாட்டு மக்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பல்வேறு இடங்களில் பொது மக்களே முன்வந்து தமது தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்பவற்றை மூடி விட்டு வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர்.

இதனால் நாட்டில் மோசமான பொருளாதார இழப்பு தலைதூக்கி வருகிறது. ஒரு சிலரது கவனக்குறைவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத தன்மையும் முழு நாட்டையும்  முடக்கி வருகின்றது.

இதன் காரணமாக வர்த்தக, தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுமானால் இலங்கை போன்ற வளர்முக நாட்டில் அது மக்களின் வறுமைக்கும் பட்டினிச் சாவுக்குமே வழிவகுக்கும்.

இதனிடையே மலையகத்திலும் வைரஸ் தொற்று பரவி விடுமோ என்ற அச்ச நிலை தலைதூக்கியுள்ளதைக் காணலாம். குறிப்பாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் நகர்  தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு சிலருக்கு தொற்று பரவியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார். 

ஹட்டன் பகுதியில் 10 தொற்று நோயாளர்கள்  இனங்காணப்பட்ட பின்னரே ஹட்டன் நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கும் தொற்று நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நகரில் அமைந்துள்ள மீன் கடை ஒன்றில் இருந்து  இருவர் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் தொற்றுக்குள்ளான நிலையிலேயே ஏனையோருக்கும் தொற்று பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம், குருநகர், பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிலர் பேலியகொடை பகுதியில் மீன் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து  அந்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓரிருவருக்கு  தொற்று ஏற்பட்டால் அது அந்தப் பிரதேசம் முழுவதுமாக தொற்று பல்கிப் பெருகிவிடும் என்பதே இதுவரை கண்டறியப்பட்ட உண்மை. இதன் காரணமாகவே வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

அத்துடன் நாட்டில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் இரண்டாவது அலை எனவும்  மிகவும் வீரியம் மிக்கது எனவும் சுகாதார மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். எனவே அனைத்து மக்களும் பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை   கடைப்பிடிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான நடவடிக்கைகள் அடிமட்ட மக்களையும் போய்ச் சேர்ந்தால் மாத்திரமே, இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.

தற்போது தோன்றியுள்ள வைரஸ் பரவலானது கொத்தணி பரவலா? அல்லது சமூக பரவலா? என்ற வாதப் பிரதிவாதங்களை விட்டு முற்றுமுழுதாக அதனை நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பது அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும்.

நேற்று மாத்திரம் ஒரே நாளில் மூவர் மரணித்துள்ளனர். இதேவேளை நேற்று வரை சுமார் 35,000 பேர் அவரவர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கூடுமான வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்வது அவசியம். அதேவேளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார நடைமுறைகளை கைவிடாமல் முறையாகக் கடைப்பிடிப்பது  மிகவும் இன்றியமையாதது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்