உள்ளகப் பொறிமுறையூடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். சர்வதேசத்திடம் ஒருபோதும் நாம் மண்டியிடப்போவதில்லை. எம்மிடத்தில் இரட்டை நிலைப்பாடு எதுவுமில்லையென அமைச்சர் கபீர் ஹாசிம் சபையில் உறுதிபடத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணியின் தற்போதைய பொருளாதார நெடுக்கடி மற்றும் அரசின்  மறைமுக அடக்குமுறைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பல கஷ்டங்களை சந்தித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு தரப்பினர் கூறுகின்றனர். பத்து வருடங்களாக மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் அமர்ந்திருந்தார். அவருடன் அமைச்சுப் பதவிகளை பெற்று  இருந்தீர்கள். நீங்கள் பொது மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்? பாரிய கடன்களை வெவ்வேறு வகையில் பெற்று ஒட்டுமொத்த மக்களையும்  கடனாளிகளாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். நாம் தற்போது அந்த நிலைமைகளை மாற்றுவதற்கு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 

இந்த சபையில் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு எமது அரசாங்கம் இடமளித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த ஆட்சியாளர்களைப் போல் அல்ல . சிங்களத்தில் ஒன்றையும் ஆங்கிலத்தில் ஒன்றையும் கூறும் இரட்டை நிலைப்பாட்டை கடந்த ஆட்சியாளர் கொண்டிருந்தார்கள். எம்மிடம் இரட்டை நிலைப்பாடு இல்லை. நாம் தெளிவாக இருக்கின்றோம். உள்ளக ரீதியாக பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றோம். சர்வதேசத்திடம் நாம் ஒருபோதும் மண்டியிடப் போவதில்லை. சர்வதேசத்திடம் எமது நாடு மண்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை. 

முன்னாள் ஜனாதிபதி கடந்த காலத்தில் மின்சாரக் கதிரைகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறிவந்தார். ஜனவரி எட்டாம் திகதிக்குப் பின்னர் அவர் அவ்வாறு கூறுவது கிடையாது. நாம் மஹிந்த ராஜபக் ஷ மின்சார கதிரைக்கு செல்லுவதிலிருந்து பாதுகாத்துள்ளோம். ஒன்றிணைந்த எதிர்தரப்பினரே உங்களின் தலைவரை நாம் பாதுகாத்துள்ளோம். ஆகவே நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. 

நீதித்துறை

தற்போது எமது நாட்டில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுகின்றது. நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக் ஷ எம்.பி. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் பழிவாங்கள் அல்ல. வற்வரிக்கு எதிராக எதிரணி தாக்குதல் செய்த வழக்கிற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே தற்போது நீதித்துறை சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் மாற்றங்கள் நிகழ்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ 2005 இலிருந்து 2015 வரையில் பதவியிலிருந்த காலத்தில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைவடைந்தது. வெறுமனே கட்டடங்களை நிர்மாணித்து பொருளாதார அபிவிருத்தி என காட்ட முனைந்தார்கள் என்றார்.