மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்த பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் பணிப் புரிந்த மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்த பிரிவை வதிவிடமாக கொண்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மனைவிக்கும் மேலும் அவரது இரு பிள்ளைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் படி குறித்த மனைவிக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளின் பரிசோதனை அறிக்கை தற்போதுவரை கிடைக்கப்பெறவில்லையென தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரவுன்லோ பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மாமாவின் ஈமக்கிரிகைக்காக வந்த நிலையில் மேற்கோண்ட சுயபரிசோதனையில் குறித்த நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தொற்றாளர்களினால் மேலும் 23 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  பொது சுகாதார அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று 27 ஆம் திகதி மாலை 4 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மஸ்கெலியா, சாமிமலை நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடுவதாக தீர்மானம் எடுத்துள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார்.