( செ.தேன்மொழி)

அரசாங்கம் முன்னர் நாட்டு மக்கள் மீது அதீத பற்றுடையவர்கள் என்றே  தங்களை காண்பித்துக் கொண்டது. தற்போது மக்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அரசாங்கம் தான் எண்ணியது போல மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டு அமைதிகாத்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றம்சுமத்தியுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தற்போது வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பரவ ஆரம்பித்திள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நாடிகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்த மற்றும் மீன் விற்பனையில் ஈடுப்பட்ட சில வர்த்தகர்களை பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யாமலே அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அவருடன், அவருடைய குடும்பத்தினருக்கும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதுடன், வைரஸ் தொற்றினால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதன் பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர்.

இதனால் மேலும் நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே உள்ளது. அதற்கமைய வைரஸ் பரவல் மீண்டும் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அரசாங்கமே அதனை ஓழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்புக்குள்ளும் பல பொலிஸ் பிரிவுகளுக்கு ஒரு வார காலமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களில் சுமார் பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பார்கள். அதேவேளை அவர்களுக்கு நிரந்தர வருமானமும் கிடையாது. பெரும்பாலும் இவர்கள் நாளாந்த வருமானம் பெற்றே வாழ்ந்து வருகின்றனர்.

அதனால் தற்போது அவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக 5000 ரூபாய் நிதியுதவியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.