இத்தாலியில் கொவிட்-19 கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திங்கட்கிழமை வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது.

டுரின் உட்பட பல முக்கிய நகரங்களில் மோதல்கள் பதிவாகியுள்ளன .  பொலிஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.

எதிர்ப்பாளர்களை கலைக்க மிலன் நகரில் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேபிள்ஸிலும் வன்முறை பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 06.00 மணிக்கு உணவகங்கள், மதுபானசாலைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சினிமா திரையரங்குகள் ஆகியவற்றை மூடுவதற்கு அரசாங்கத்தின் உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் இந்த போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.

மிலன் இருக்கும் லோம்பார்டி பிராந்தியம், மற்றும் டுரின் இருக்கும் பீட்மாண்ட் பிராந்தியம் உள்ளிட்ட பல பிராந்தியங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரோம், பலேர்மோ உள்ளிட்ட சுமார் பல நகரங்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்துள்ளன.

இவ்வருடம் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடளாவிய ரீயிலான ஊரடங்கிற்கு மக்கள் கட்டுப்பட்டு இருந்தாலும், புதிய கட்டுப்பாடுகளின் அறிவிப்பு மக்களிடம் உடனடி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்கள்  மீண்டு வருவதாகவும், புதிய கட்டுப்பாடுகள் அதனை முடக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

போராட்டகாரர்கள் பட்டாசுகளை கொளுத்தி விட்டு நகரத்தில் வண்ணத் தீப்பொறிகளை எரித்துள்ளனர். அதே நேரத்தில் கலவரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மிலனில், மக்கள்  "சுதந்திரம், சுதந்திரம், சுதந்திரம்" என கூச்சலிட்டு நகர மையத்தில் பொலிஸாருடன் மோதிக்கொண்டுள்ளனர். இந்த நகரம் லோம்பார்ட் பிராந்தியத்தின் தலைநகராகும், இது குறிப்பாக வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.