- சிவலிங்கம் சிவகுமாரன் -

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பதாக ஏற்பட்ட  இந்து –முஸ்லிம் கலவரத்தின் பதற்றத்தை தணிப்பதற்கு 1938 ஆம் ஆண்டு    முஸ்லிம் லீக் ஸ்தாபகர் முகம்மது அலி ஜின்னாவும் மகாத்மா காந்தியும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். அது தோல்வியில் முடிந்தது.  கலவரத்தின் நீட்சியாக 1940 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூரில் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் என்ற தனி நாட்டு பிரகடனத்தை வெளியிட்டது. 

காந்தி மனங்கலங்கி போனார். இந்தியா அனைவருக்கும் உரித்தானது என முழங்கினார். மதவாதிகளிடம் அது எடுபடவில்லை. இந்துத்துவா கொள்கை கொண்ட சாவர்க்கார் போன்றோர் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியர்களே அல்லர் என மதவாத விஷத்தை கக்கினர். முஸ்லிம்கள் வெளியேறலாம் என்று கூறினர். 

 1944 ஆம் ஆண்டு மீண்டும் இறுதி முயற்சியாக காந்தி  ஜின்னாவை சந்தித்து பேச்சு நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் போது  காந்தி ஜின்னாவிடம் ‘ எமக்கு இப்போது சுதந்திரமே தேவை. பிரிவினை தேவையாற்றதொன்று சுதந்திர இந்தியாவின் பிரதமராக உங்களை சிபாரிசு செய்வதற்கு கூட நான் தயாராக இருக்கின்றேன் தயவு செய்து பிரிவினை வேண்டாம் சிந்தியுங்கள்’ என்று கூறிய போது அதற்கு ஜின்னா, ‘ மிஸ்டர் காந்தி நீங்கள் நேர்மையான மனிதர் என்பது எம் அனைவருக்கும் தெரியும், ஆனால் உங்களுக்குப் பிறகு இங்கு யார் இருப்பார் என்பது எனக்கும் என்னை நம்பி இருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தெரியாது. முஸ்லிம்களுக்கு  என்ன நடக்கும் என்பதையும் எவராலும் நினைத்துப்பார்க்க முடியாது. ஆகவே எம்மை தனியாக செல்ல விடுங்கள் …அது தான் நல்லது ’ என்றார். 

சுதந்திரமே முன்னுரிமை என காந்தி கூற, பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக இருக்க இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஆழமாகின. இறுதியில் இந்தியா இரண்டானது. இந்த வரலாற்று சம்பவத்தை எதற்கு இலங்கை அரசியலுடன் ஒப்பிட வேண்டும்? 

காரணம் இருக்கின்றது. நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசியல் அமைப்பை 1978 இல் கொண்டு வந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா எதிர்காலத்தில் இந்த அதிகாரத்தை யார்  எப்படியெல்லாம் பாவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பே மரணித்து விட்டார்.    ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச விளங்கிய போது இடம்பெற்ற சம்பவங்கள் மிக முக்கியமானவை. அவர் கொண்டு வந்த 18 ஆவது திருத்தச்சட்டம் மிக முக்கியமான ஜனநாயக பண்புகளை விழுங்கி விட்டதொன்றாகவே காணப்பட்டது. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாகலாம் என்ற விடயத்தை கொண்டு வந்த அவர் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ்  ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களை அதிகாரங்கள் அற்ற அமைப்புக்களாக மாற்றினார். நிறைவேற்றதிகாரத்தின் ஆபத்தை சிவில் சமூகங்கள் ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளத்தொடங்கிய காலகட்டமாக அது விளங்கியது. மக்களாட்சி என்ற வார்த்தையை மக்கள் உச்சரிக்க தொடங்கியது அப்போது தான். 

இரண்டாவது பதவி காலத்தில் மஹிந்தவின் அதிகாரங்கள் எல்லை மீறி பயணித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஏதேச்சாதிகாரத்தின் பாதையை திறந்து விட்ட திருத்தச்சட்டம் என 18 ஐ அப்போது அனைவரும் வர்ணித்திருந்தனர்.  

ஆனால் அதை முழுமையாக அனுபவிக்க மஹிந்தவால் முடியவில்லை/ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். மக்களாட்சி என்ற வாசகத்தையும் நிறைவேற்றதிகார முறையை ஒழிப்போம் என்ற கோஷத்துடனும் மைத்ரி– ரணில் கூட்டணி தேசிய அரசாங்கத்தை அமைத்தது.  

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அதே வேளை 9 சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் அதிகாரத்தை அரசமைப்பு சபை கொண்டிருப்பதான பாராளுமன்ற ஜனநாயகத்தை தக்க வைத்துக்கொள்ளக் கூடிய பல ஜனநாயக அம்சங்களுடன் கூடிய 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறியது. இதில் முக்கியமாக கூற வேண்டிய விடயம் 225 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாராளுமன்றில் 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக 215 பேர் வாக்களித்திருந்தனர். இதில் அரைவாசியானோர் மஹிந்த விசுவாசிகளாவர். ஆக ஒரு தனிமனி சர்வாதிகார செயற்பாடுகளை விரும்பாதவர்கள் மஹிந்தவின் பக்கமும் அந்நேரத்தில் இருந்திருக்கின்றனர் என்பது கண்கூடு.

ஜே.ஆர்.கொண்டு வந்த நிறைவேற்றதிகார முறையின் உச்ச அதிகாரம்  மஹிந்த ஆட்சி காலத்தில் வெளிப்பட்டது என்றால் இப்போது ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியில் மீண்டும் அது 20 ஆவது திருத்தச்சட்டம் என்ற பெயரில் அரங்கேறப்போகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் அதை சிறப்பாக பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார். தான் கொண்டு வந்த 18 ஆவது திருத்தச்சட்டமே தனக்கு படுகுழியாக அமைந்தது என்பதை  அவர் நன்றாக உணர்ந்தேயிருக்கிறார், ஆனால் அது குறித்து அவர் தனது சகோதரரான ஜனாதிபதிக்கு எடுத்துச்சொல்ல முடியாத நிலைமையே உள்ளது. 

ஏனென்றால் ஜனாதிபதி கோட்டாபய இப்போது ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது பெளத்த பீட தலைவர்களினதும் தனது வியத்மக அமைப்பு உறுப்பினர்களிடம் மட்டுமே என்பது மஹிந்த அணியினருக்கு நன்கு தெரியும். ஒரு கட்டத்தில் பெளத்த பீடாதிபதிகள் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக கருத்துக்களை கூறிய போது அதன் பின்னணியில் மஹிந்த இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஜனாதிபதிக்கு இல்லாமலில்லை.  20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆரம்பத்தில் கொண்டு வந்தது யார் என்று தெரியாமல் நாட்டு மக்களே குழம்பியிருந்த போது இறுதியில் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பேற்றமை அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊழலை முற்றாக எதிர்க்கும் ஒரு நபராகவும் நாட்டை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்வதற்கு ஆர்வமாக இருப்பது மிக முக்கியமாக அவர் பெளத்த கோட்பாடுகளுக்கேற்ப இயங்குவதுமே இப்போதைக்கு அவரிடமிருக்கும் சாதகமான பண்புகளாக மக்கள் பார்க்கின்றனர்.  ஆகவே 20 ஆவது திருத்தச்சட்டம் தமக்கு எப்போதும் ஆபத்தாக இருக்காது  என  அவருக்கு வாக்களித்த மத்திய தர வர்க்கத்தினர் கருதுகின்றனர். 

அதாவது இப்போதே அவர் நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தக் கூடிய ஆளுமையிலேயே இருக்கின்றார். 20 ஆவது திருத்தச்சட்டம் அவருக்கு புதிதாக என்னவற்றை தான் கொடுத்து விடப்போகின்றது என்ற எண்ணமே அது. ஆனால் காந்தியிடம் அலி ஜின்னா கேட்டது போன்று இவருக்குப்பிறகு இந்த அதிகாரத்துக்கு வரப்போகின்றவர்கள் இந்த நிறைவேற்றதிகாரத்தை வைத்து என்னவெல்லாம் செய்வார்களோ என்ற அச்சம் தோன்றியிருப்பது என்னவோ உண்மை. இந்த அச்சம் சில வேளைகளில் ராஜபக்ச குடும்பத்தினருக்கே ஏற்பட்டிருக்கலாம்.  

ஏனென்றால் அடுத்த தடவை ஜனாதிபதி வேட்பாளராக யார் வரப்போகின்றார்கள் என்பதை அடுத்த 4 வருட கால ஆட்சிமுறை தீர்மானிக்கும். 75 வயதாகும் மஹிந்த தனது மகன் நாமலையே ஜனாதிபதியாக்க விரும்புவார். இதன் மத்தியில் பொதுஜன பெரமுன என்ற அமைப்பை கட்டியெழுப்பிய பஸில் ராஜபக்ச  இருக்கிறார். இரண்டாவது முறை அதிகாரத்தை தக்க வைக்க  கோட்டாபய நிச்சயம் முயல்வார். எது எப்படியென்றாலும் ராஜபக்ச குடும்பத்து உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு அவர்களுக்குள் ஒற்றுமை அவசியம். இவர்களுக்கு வெளியே ஜனாதிபதி வேட்பாளராக வரப்போகின்றவர் சில நேரங்களில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தன்னை நிலை நிறுத்துவதற்கு எப்படியான  திருத்தச்சட்டத்தை  கொண்டு வரப்போகின்றாரே தெரியவில்லை. அல்லது ராஜபக்ச சகோதரர்கள் சில காலங்களுக்கு தமது குடும்ப ஆட்சியை தொடர்வதற்கு அடுத்தடுத்து என்னவெல்லாம் கொண்டு வரப்போகின்றார்கள் என்பதும் தெரியாதுள்ளது. 

19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்போது  215 வாக்குகள் கிடைத்தன. அப்போது ஆட்சியில்  இருந்த சுதந்திர கட்சி மற்றும் ஐ.தே.க இரண்டுக்கும்  மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கவில்லை. ஆனால் 20 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றுக்கு வரும் போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள அரசாங்கம் அதை பெறுவதற்கு திணறியது. அழுத்தங்களை எதிர்நோக்கியது.  இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பில்    156 வாக்குகளை  பெற்றது.  

 நிறைவேற்றதிகாரத்தை தனது அண்ணன் மஹிந்த எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதை கண்டுணர்ந்த ஜனாதிபதி கோட்டாபய அதில் சற்று கவனமாகத்தான் இருப்பார். ஏனென்றால் பெளத்த சிங்களவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் முன்னெடுக்கும் எல்லா செயற்பாடுகளுக்கும் பெளத்தர்கள் தலையாட்டிக்கொண்டிருக்க மாட்டர். மக்களாட்சி என்ற உச்சாடனத்தோடு ஆட்சிக்கு வந்த மைத்ரியை பெளத்த பீடங்கள் வரவேற்றன. ஆனால்  2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் விபரீத முடிவெடுத்த போது நாட்டின் பெளத்த பீடங்கள் பகிரங்கமாக அவரை விமர்சித்திருந்தது மட்டுமல்லாது அவரை சந்திப்பதையும் தவிர்த்தன என்பதை மறக்க முடியாது. 20 ஆவது திருத்தச்சட்டத்தை தற்காலிகமானது தான் என்று கூறும் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றே பிரதானமானது என்கிறது. அது 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். கொண்டு வந்ததை விட எந்த விதத்தில் தான் மாறுபட்டு விடப்போகின்றது?