பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சி அவர்களின் 45 வயதுக்கு மேல் நின்று விடுவதைப் போல், ஆண்களுக்கும்  அன்றோபாஸ் எனப்படும் டெஸ்டோஸ்டிரான் ஹோர்மோன் குறைபாடு தற்போது நிர்ணயிக்கப்பட்ட வயதை விட குறைவான வயதுகளில் ஏற்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இன்றைய சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள், வங்கி ஊழியர்கள், வாகன சாரதிகள். உள்ளிட்ட பல ஆண்களுக்கு அன்றோபாஸ் தாக்கம் 40 வயதுகளிலேயே ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. 

பெரும்பாலான ஆண்கள் இதனை முதுமையின் தொடக்கமாக கருதுகிறார்கள். இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் நாளாந்த பணிகளை கூட ஆர்வமின்றி செய்கிறார்கள் என்றும்,  இதற்கு இவர்களிடம் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹோர்மோன் சுரப்பில் ஏற்படும் சமச்சீரின்மையே காரணம்  என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த குறைபாட்டின் காரணமாக இவர்களது உடல் சக்தியின் இயக்கத்தில் மந்த நிலையும் உண்டாகிறது.

இன்றைய திகதியில் 40 வயதை கடக்கும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் மன அழுத்தம் தசைகளின் பலவீனம், தூக்கமின்மை, எதிர்மறையான சிந்தனை, பாலியல் செயல்பாடுகளில் போதிய ஆர்வமின்மை.. என பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதற்கு சமூக சூழல் ஒரு காரணியாக இருந்தாலும் சுய ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, சுய ஆர்வம் போன்றவற்றில் தீவிர கவனம் தொடர்ந்து இருந்தால் இத்தகைய சிக்கலில் இருந்து விடுபடலாம்.

கொரோனா நோய் பற்றிய அச்சம், பணி வாய்ப்பின்மை, மன கவலை, கைவிட்டொழிக்க இயலாத தவறான வாழ்வியல் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள், தூக்கமின்மை.. போன்றவற்றால் இத்தகைய அன்றோபாஸ் 60 வயதிற்கு முன்னதாகவே ஆண்களுக்கு ஏற்படுகிறது.

இதற்கு உளவியல் ரீதியாக ஆலோசனையும், மன வள சிகிச்சையும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியையும் இணைந்து கூட்டு சிகிச்சையாக மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பை 60 வயதிற்கு பின்னர் ஏற்படுமாறு தள்ளிப்போட இயலும்.

டொக்டர் ராஜ்மோகன்.

தொகுப்பு அனுஷா.