மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முறையாக உலக கிண்ணத்தை வென்றுத் கொடுத்த கபில்தேவ். அவரது அபாரமான துடுப்பாட்டம், வேகப்பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் தனித்துவமான தலைமைப் பதவி ஆகியவற்றினால் கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

61 வயதான கபில்தேவ்க்கு அண்மையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டமையினால் டெல்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்டு இருக்கும் அடைப்பை நீக்க ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரது உடல் நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதனிடையே வைத்தியசாலையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் ஒன்றும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் உடல் நிலை சீராக உள்ளதையடுத்து கபில்தேவ் நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.