நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளமையினால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவத்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸானது நாட்டின் 21 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

முதல் மற்றும் இரண்டாவது தொடர்புகளைத் தனிமைப்படுத்தவும், கொவிட்-19 நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கவும் சுகாதார மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொது போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துபவர்கள் விழிப்புடனும், பாதுகாப்பு வழிகாட்டல்களை அவசியம் கடைபிடிக்கவும் வேண்டும்.

கொரோனா நோயாளிகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் என்பதால், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இந்த விடயத்தில் விழிப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாது வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது கடினம். ஆகவே நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை கொண்டவர்கள் குறித்து உடனடியாக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.