20 ஆவது திருத்தமும்  முஸ்லிம் காங்கிரஸும்!

By Gayathri

26 Oct, 2020 | 11:03 AM
image

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலைமையிலேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

பல்வேறு தரப்பினரும் அது தொடர்பில் சாதக, பாதகமான தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

"முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இனவாதத்தை தூண்டிவிட்ட அரசு, இறுதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையே வைத்து தீர்மானத்தை இலகுவாக வெற்றிகொண்டு விட்டது" என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சாடியிருந்தார்.

இந்த நிலையில் பதவிக்கும் பணத்துக்குமாகவே இந்தக் கட்சி தாவல்கள் இருந்தன என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான சூழலில் 20 க்கு ஆதரவு வழங்கிய 6 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட  8 பேருக்கும் எந்த வகையிலும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக 6 முஸ்லிம் எம்.பி.க்கள் உட்பட எதிர்க்கட்சியினர் 8 பேர் அரசுக்கு ஆதரவு வழங்கினர். 

அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் நாம் அவர்களுடன் எந்தவிதமான கொடுக்கல் - வாங்கல்களையும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் அடித்துக் கூறியுள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, கட்சித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் கட்சித் தலைமையில் இருந்தும் வெளியேற வேண்டுமென சமகி மக்கள் சக்தியின் உறுப்பினர் கேஷா விதானகே கூறியுள்ளார்.

இந்த நிலையில் முஸ்லிம் சகோதரர்களின் தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியுள்ளார்.

இவ்வாறான கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அக்கட்சியின் தர்ம சங்கடமான நிலைமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

அவர் கூறுகையில், ஜனநாயகத்தை தாரைவார்க்கும் 20 ஆவது திருத்தத்தை எமது கட்சியின் நான்கு உறுப்பினர்கள் ஆதரித்ததன் மூலம் முஸ்லிம்களின் அடையாளமாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான நான் சூழ்நிலை கைதி ஆகிவிட்டேன்.

நான் ஒருபோதும் இரட்டை வேடம் போடவில்லை என்பதை இதயசுத்தியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

முஸ்லிம்களின் அடையாளமாக செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் தனது சமூகம் சார்ந்த சரியான தீர்மானங்களை எடுத்தது.

அது மாத்திரமன்றி ஜனநாயகத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தை கட்சி ஆரம்பத்திலிருந்து எதிர்த்தது. இதனைத் தடுத்து நிறுத்த உயர் நீதிமன்றம் வரை நாடியது.

மேலும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் அவர்கள் என்னிடம் அனுமதி பெற்று வாக்களிக்கவில்லை. அனுமதி பெற்றதாக கூறுவது முற்றிலும் தவறானது. 

அனைத்துக்கும் மேலாக எதிரணியுடன் எவ்வாறு நாம் இணைந்து செயல்படுவது? ஆளும் தரப்பினரையும் எதிர்த் தரப்பினரையும் கையாள நாம் இரட்டை வேடம் போடுவதான தோற்றத்தையும் இது தலைதூக்க செய்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இரட்டை வேடம் போடவில்லை. 

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் நான் பங்கேற்றபோது அங்கு எமக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான சூழலில் நான் சூழ்நிலை கைதி ஆகிவிட்டேன் என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

இதில் சேதாரம் யாருக்கு என்பதை எதிர்காலமே நிர்ணயிக்க வேண்டும் அதுவரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right