கொரோனா வைரஸ் இரண்டாவது அலை  தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால்  ஸ்பெயின் நாடு இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த ஊரடங்கு சட்டம்  இரவு 11:00 மணி முதல் காலை 06:00 மணி வரை  ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக  அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ் தெரிவித்துள்ளார்.

அவசர நடவடிக்கைகளின் கீழ், உள்ளூர் அதிகாரிகள் பிராந்தியங்களுக்கு இடையிலான பயணத்தையும் தடை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 15 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் புதிய விதிகளை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்குமாறு பாராளுமன்றத்தை கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் முதல் அலையின் போது ஸ்பெயின் கடுமையாக பாதிக்கப்பட்டது, மேலும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியது.

இந்நிலையில், பல ஐரோப்பிய பிராந்தியங்களைப் போலவே ஸ்பெயின் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 1,110,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 34,752 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. அங்கு நாளாந்த புதிய கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பது நாட்டின் சுகாதார சேவைகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 52,010 நோய்த்தொற்றுகளும், 116 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை சனிக்கிழமை 45,000 க்கும் அதிகமான நோய்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ளது.