நாட்டில் நேற்றைய தினம் 348 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மினுவாங்கொடை - பேலியாகொட கொத்தணிப் பரவலின் எண்ணிக்கையானது 4,398 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் இவ்வாறு நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி ஜனவரி மாதம் முதல் நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,872 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 89 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியும் உள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3,803 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 30 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 4,054 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 537 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், 16 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.