நேர்காணல் : ஆர்.ராம்

'புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதியும் அச்செயற்பாடு விரைந்து நடைபெறும் என்று உறுதி அளித்திருக்கின்றார்'

இந்து சமுத்திரத்தில் இலங்கை பொக்கிஷமான நிலப்பரப்பினைக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி அரிய வளங்களையும் கொண்டிருக்கின்றது. அதனால் தான் சர்வதேச ஒருவர் பின் ஒருவராக சக்திகள் இருதரப்பு உடன்படிக்கைகள் என்ற போர்வையில் தமது நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக வந்துகொண்டேயிருக்கின்றன.இவர்கள் எமது உறவுக்காரர்களாக இங்கு வரவில்லை எமது வளங்களை சூறையாடிச் செல்வதற்காகவே வருகின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று அபயாராம விகாரையின் எல்லே குணவங்ச தேரர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுமையானவடிவம் வருமாறு, 

கேள்வி:- 20ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- 20ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிட்டதன் பின்னர் அதில் உள்ள பாரதூரமான விடயங்களை நான் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தேன். நான் உட்பட முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே நாலக்க தேரர் ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு 20ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கடிதம் எழுதியிருந்தோம். குறிப்பாக, சட்டவாட்சிக்கு எதிராக ஸ்திரமற்ற அரச பொறிமுறையையொன்று உருவாகும் என்பதை சுட்டிக்காட்டி சில விடயங்களில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு வலியுத்தியிருந்தோம். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு மாற்றங்களை செய்துள்ளார்.

கேள்வி:- ஆனால் நீங்கள் குறித்துரைத்த இரட்டைப் பிரஜாவுரிமை விடயம் மாற்றப்படவில்லையல்லவா?

பதில்:- ஆம். அதனை புதிய அரசியலமைப்பில் அகற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாக உள்ளது. அதனையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

கேள்வி:- புதிய அரசியலமைப்பு விரைந்து உருவாக்கப்படவுள்ள நிலையில் 20ஆவது திருத்தத்தின் அவசியம் என்ன?

பதில்:- இந்த வினாவினை நாமும் எழுப்பியிருந்தோம். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அல்லவா 20 ஆவது திருத்தினையும் இரட்டைப் பிராஜாவுரிமைக்கான பாராளுமன்ற அனுமதியையும்  ஆதரித்து இருக்கின்றார்கள். ஆகவே மக்கள் தாம் ஆணை வழங்கியவர்களிடத்திலேயே இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டும்.

நாங்கள் தேசிய விடயங்களில் கவனம் செலுத்துகின்றோம். தேசியம் என்பது தனியே சிங்களவர்களை மட்டும் மையப்படுத்தியது அல்ல. முழு நாட்டையும் மையப்படுத்தியது. முழு நாட்டின் நலன் கருதியே நாம் இந்த விடயங்களில் நேரடியாக தலையீடுகளைச் செய்திருந்தோம். நாம் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. மதத்தலைவர்கள். அனைத்தின மக்களினதும், நாட்டினதும் கரிசனையின் பால் இவ்வாறான விடயங்களில் தலையீடுகளைச் செய்திருந்தோம். 

கேள்வி:- 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதிகள் சிலர் ஆதரவளித்துள்ளமைiயும் பலர் எதிர்த்துள்ளமையையும்  எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- இருவேறு நிலைப்பாடுகள் தற்போது அனைத்து விடயங்களிலும் காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் முஸ்லிம் தரப்பு உறுப்பினர்களை இணைக்கப்போவதில்லை என்று பாராளுமன்றில் உள்ளவர்களே கூறினார்கள். அவ்வாறிருக்கையில் இந்த நாட்டின் அபிவிருத்திஇ முன்னேற்றம்இ தேசிய பாதுகாப்புஇ பண்பாடு கலாசாரம் போன்ற விடயங்களுக்காக யாராவது ஒன்றிணைவார்களாயின் அதனை மிக உயர்ந்த செயற்பாடாகவே கருதுகின்றேன். ஆனால் இதுபோன்ற ஆதரவளிக்கும்இ அதன் மூலம் கூட்டிணையும் செயற்பாடானது சுயலாபத்தினை அடிப்படையாகக் கொண்டது. எம்மைப்பொறுத்தவரையில் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேசிய ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என்பதே எதிர்பார்பாக உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தது. ஆனால் அத்தரப்பு தமக்கு வாக்களித்த மக்களுக்கு உரிய தெளிவு படுத்தல்களை செய்யவில்லை. 20ஆவது திருத்தச்சட்டம் மக்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது என்றால் அவர்கள் தாமாக முன்வந்து மக்களை தெளிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதனை அத்தரப்பு செய்யவில்லை. கூட்டமைப்பு இன்று செல்வந்த வர்க்க அரசியல் கட்சியாக மாறிவிட்டது.

கேள்வி:- இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படாது தேசிய ரீதியில் ஒன்றுபடுதல் சாத்தியமாகுமா?

பதில்:- 1948இல் நாடு பூரணமான சுதந்திரத்தினைப் பெறாது விட்டாலும் அந்த சுதந்திரத்திரனைப் பெறுவதற்காக மூவினத்தினைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றுபட்டிருந்தார்கள். அப்போது இனங்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கவில்லை. பின்னரான சூழலில் தான் அரசியல்வாதிகளின் சுயநலனுக்காக இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல்கள் செய்யப்பட்டு இடைவெளிகள் அதிகரிக்கப்பட்டு விட்டன. தற்போதைய சூழலில் இனங்களுக்கிடையிலான பிளவுகளை மென்மேலும் அதிகரித்துச் செல்வதால் எதிர்காலமே ஆபத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்படப்போகின்றது.

இந்த நாட்டின் அரிய வளங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. நாட்டின் ஒவ்வொரு பாகங்களும்இ சீனா, இந்தியா, அமெரிக்கா என்று பகிர்ந்தளிக்கும் நிலைமைகள் ஏற்படுகின்றன. இதனைவிடவும் சோபா, எக்ஸா,  எம்.சி.சி என்று இன்னமும் எமது நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலைமைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அற்பத்தனமான விடயங்களை கருத்திற் கொண்டு எமக்குள் நாம் முட்டிமோதுவதால் எவ்விதமான பலனும் கிட்டப்போவதில்லை என்பதை அனைத்து இனக்குழுமங்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளது. 

கேள்வி:- நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொள்கின்றபோது ஏனைய நாடுகளின் உதவிகளின்றி நகரமுடியாத நிலைமையல்லவா தோற்றம் பெற்றிருக்கின்றது?

பதில்:-அதற்குரிய உபாயங்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாட்டினை விற்பனை செய்வதற்கு இடமளிக்கமுடியாது. தற்போது பார்த்தீர்கள் என்றால் சீனா, அமெரிக்கா, இந்தியா என்று மாறிமாறி உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இலங்கையின் உறவுக்காரர்களா என்ன?

உலகில் இப்போது கனிய வளங்களை ஏகாதிபத்திய நாடுகள் கையகப்படுத்தும் செயற்பாட்டில் இறங்கியுள்ளன. அதனுடைய எதிரொலி எமது நாட்டிலும் காணப்படுகின்றது என்பதே யதார்த்தமான உண்மையாகும். மேலும் எமது நாட்டின் பிரதான சொத்தாக இருப்பது நிலப்பகுதியாகும். அது வெளியாருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் சீனாவுக்கு துறைமுகமும் கணிசமான நிலப்பரப்பும் அளிக்கப்பட்டது. இந்தியா எண்ணெய் குதங்களை முழுமையாக பெற்றுக்கொள்ள முனைகின்றது. அமெரிக்க எம்.சி.சி ஊடாக நிலங்களைப் பெற்றுக்கொள்ள முனைகின்றது. இவ்வாறு வெளிச்சக்திகளின் விருப்புக்கு ஏற்றவாறு செயற்படுவதாக இருந்தால் நாட்டில் அரசாங்கம் தேவையில்லை. நாட்டை விற்பனை முகவர்களிடத்தில் கையளித்துவிட்டு செல்லமுடியும்.

அகவே நாட்டை துண்டுதுண்டுகளாக விற்பனை செய்யும் நிலைமைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசியல்வாதிகளின் பிரிவினைக் கருத்துக்களை நம்பி முட்டாள் தனமாக இருக்காகது தேசிய ரிதியில் அனைத்து இனக்குழுமங்களும் சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்ததுபோன்று தற்போதும் இணையவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விசேடமாக அடுத்தபரம்பரையின் தலைவர்களான இளைஞர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


கேள்வி:- ஆனால் நீங்கள் குறிப்பிட்ட வெளிச்சக்திகளால் அரசாங்கத்திற்கு வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அழுத்தங்கள் அளிக்கப்படலாமல்லவா?

பதில்:- எம்மையோ மக்களினதோ விருப்பு வெறுப்புக்களை கேட்டு வெளிநாடுகளுடன் ஒப்பந்தகள் செய்யப்படவில்லை. அவற்றை அரசாங்கங்களே தமது இருப்பிற்காக செய்து கொண்டன. ஆகவே அரசியல்வாதிகளும், அவர்கள் பங்கேற்றுள்ள அரசாங்கங்களும் தான் அந்த அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும். அதனால் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்ளவேண்டும். அந்த விடயங்களை மக்களிடத்தில் திணிக்க முடியாது.