தமிழக அரசியல் தி.மு.க – அ.தி.மு.க. என்ற இரட்டை நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்ற அவதானம் வெளியிடப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தொண்டர்கள் அயராது பாடுபட்டு, தங்கள் கட்சிக்கு தேர்தலில் வெற்றியை பெற்றுத் தந்தார்கள். 

அன்று தமிழகத்திலிருந்து அகற்றப்பட்ட தேசிய கட்சியான காங்கிரஸ், இன்றுவரை தமிழகத்தில் வளர்த்துக் கொள்வதற்கும், தங்களது கட்சியின் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் தடுமாறி வருகிறது. ஆனால் தி.மு.க.விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர், அ.தி.மு.க. என்ற தனி கட்சியை தொடங்கி, திமுகவில் அரசியல் பாடத்தையும், அனுபவத்தையும் கற்ற தொண்டர்கள், பாரிய அளவில் அக்கட்சியில் இணைந்து கடுமையாக உழைத்ததால் அக்கட்சி அரசியல் ரீதியிலாக பாரிய வெற்றியை பெற்றது.

இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் தொண்டர்களும், கணவன் மனைவியாக, அண்ணன் தம்பியாக, அப்பா பிள்ளையாக, இருந்தாலும் கட்சி என்று வரும்பொழுது, தங்களது விசுவாசத்தை தீவிரமாக வெளிப்படுத்தினர்.  குறிப்பாக தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலின்போது தங்களது கட்சியின் விசுவாசத்தை தீவிரமாக வெளிப்படுத்தியது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதும் அக்கட்சியின் தொண்டர்கள் இதே அளவிற்கான விசுவாசத்துடனும், எதையும் எதிர்பார்க்காமலும் தீவிரமாக கட்சி பணியை ஆற்றுகிறார்களா..என்றால் அது சந்தேகம் தான். 

'தொண்டர்களின் கட்சி' என்று போற்றப்படும் அ.தி.மு.க.வில் இன்று 'இரட்டை தலைமை' இருப்பதால் தொண்டர்கள் பெயரளவிற்கே கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அல்லது நாளாந்த வருவாய்க்காக கட்சி பணியாற்றுகிறார்கள். மேலும் இவர்களின் எதிர்பார்ப்பு , அரசியல் ரீதியாக உழைக்க வேண்டும் என்றால் பிரதிபலன் என்ன? என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது அவர்களை சார்ந்த கட்சி, தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முதல் தடையாக இருக்கிறது. தற்பொழுது தி.மு.க.விலும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. 

இதனால் தான் அண்மையில் ஒரு திருமண விழாவில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின்,'1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது எதையும் எதிர்பாராமல் தேநீர் மட்டுமே குடித்துவிட்டு தி.மு.க. தொண்டர்கள் கட்சிக்காக உழைத்தார்கள். அதுதான் அந்தக் கட்சியின் வெற்றிக்கு காரணம் என்று பெரியவர் பக்தவத்சலம் கூறியதை குறிப்பிட்டிந்தார் 

அதாவது அரசியல் கட்சி தொண்டர்களாக இருப்பவர்கள், எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் இந்தப் போக்கு தற்போதைய தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சி தொண்டர்களிடமும் இல்லை என்பதுதான் மறுக்க முடியாத - ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தும் களமாக இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் திகழ்வதால், அதனை முதன்மையாக தெரிவுசெய்து அதனூடாக அரசியல் கட்சியின் பணிகளை செய்து வருகிறார்கள். 

இதனை மாற்றம் என்று ஏற்றுக் கொண்டாலும், இதில் ஏற்பட்டுள்ளதை போன்றே வாக்காளர்களின் மனதிலும் தொண்டர்களின் மனதிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை ஓரளவு அவதானித்த தி.மு.க., அடுத்த தலைமுறையை சேர்ந்த தொண்டர்களையும் தம்பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காக இணையம் மூலம் உறுப்பினர்களை - தொண்டர்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதே பாணியை அ.தி.மு.க.வும் பின்பற்றுகிறது. வேறு அரசியல் கட்சிகளும் இந்த பாணியை கடைப்பிடித்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் களம் உணர்த்தும் உண்மை.

தற்போதைய அரசியல் சூழலில் ஒரு அரசியல் கட்சிக்கு அக்கட்சியின் தொண்டர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது தெரியவருகிறது. அ.தி.மு.க.வின் தொண்டர்களானாலும் சரி , தி.மு.க.வின் தொண்டர்களானாலும் சரி, இவ்விரு கட்சிகளின் தொண்டர்களும் அக்கட்சியை சார்ந்த அரசியல் ஆளுமைகளான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆ.ர் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றலால் தன்வயப்பட்டவர்கள். அவர்கள் மீது அபிமானம் கொண்டு அரசியல் கடமையை செய்தார்கள். 

ஆனால் தற்போது அ.தி.மு.க.வில் உள்ள 'இரட்டை தலைமை' மீதோ அல்லது தி.மு.க.வின் தலைவரான ஸ்டாலின் மீதோ அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு பாரிய அளவில் அபிமானம் ஏதும் இல்லை. ஏனெனில் இவ்விரு தலைவர்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கிறதே தவிர அதற்கான அரசியல் இராஜதந்திரம் இவர்களிடத்தில் இல்லை என்பது கடந்த நான்காண்டு காலமாக பட்டவர்த்தனமாக தெரிகிறது.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி, எப்படி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நடைபெறுகிறதோ.. அதேபோன்றுதான் எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் எந்த கட்சியின் தொண்டர்கள் ஒருமித்த குரலுடன் ஆதரித்து வாக்களிக்கிறார்களோ. அக்கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும்.

இதனை உணர்ந்த தி.மு.க. தலைமை, அண்மைக்காலமாக உறுப்பினர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் அக்கறை காட்டி வருகிறது. ஆனால் இவ்விடயத்தில் அ.தி.மு.க. சற்று பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் இந்த போக்கை உணர்ந்த திரை நட்சத்திரமான ரஜினிகாந்த் இதனைத் தவிர்க்கும் வகையில், தொண்டர்கள் வேண்டும். ஆனால் அவர்களுக்கு கிளை கழக பொறுப்புகளை வழங்க கூடாது என்று சுட்டிக்காட்டினார். 

அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்னரே தொண்டர்கள் பதவிகளை எதிர்பார்க்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கும் ரஜினிகாந்திற்கு அரசியல் உலகில் மக்களின் - வாக்காளர்களின் ஆதரவு இருந்தாலும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

அதே தருணத்தில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆளுமைகளை,சாமானிய மக்களின் தலைவனான அரவிந்த் கெஜ்ரிவால், புது தில்லியில் எப்படி வீழ்த்தினாரோ, அதேபோல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்ற இரண்டு பெரும் அரசியல் பிம்பங்களை - தொண்டர்கள் புடைசூழ இருக்கும் அரசியல் கட்டமைப்பை உடைத்து, ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என்று தமிழக மூத்த அரசியல்வாதிகள் எதிர்வு கூறுகின்றனர்.

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றதன் பின்னணியில் விளிம்புநிலை மக்களும், அக்கட்சியின் தொண்டர்களும் அடிப்படை தூண்களாக திகழ்ந்தனர். ஆனால் ரஜினி விடயத்தில் இவ்விரண்டு தூண்களையும் அரவணைத்து சென்று அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்ற வாக்குறுதியை இதுவரை ரஜினி தெளிவாக வழங்கவில்லை என்பதால் அவரால் அரசியலில் பிரவேசித்து, குறுகிய காலத்திற்குள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இயலாது 

ஆகவே  அ.தி.மு.க அல்லது தி.மு.க. என்ற இரண்டு திராவிட கட்சிகளில் ஒரு கட்சி தான் தமிழகத்தை ஆளும் என்றும், அதற்கு அக்கட்சியில் உள்ள தொண்டர்கள் பலம் பறைசாற்றுகிறது இதனை வாக்காளர்களாகிய தமிழக மக்களும் ஆமோதிப்பார்களா?

குடந்தையான்.