-கார்வண்ணன்

“தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையே, சமூகத் தொற்றை நோக்கி நாடு நகருவதற்கான அறிகுறியை வெளிப்படுத்துகிறது”

கனடா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில், கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.  அங்கு உயிரிழப்புகளும் அதிகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும் அதனையும் தாண்டிய ஒரு அசாத்தியமான துணிச்சலும், அதனை எதிர்கொள்வதில் ஒரு அச்சமின்மையும் பரவலாக காணப்படுகிறது. இலங்கையில் கொரோனா என்றதும் பீதியில் உறைகின்றதைப் போல, அங்கு நிலைமைகள் இல்லை. இலட்சக்கணக்கான மக்கள் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் - பெரும்பாலானவர்கள் தாமாகவே குணமடைந்து விடுகிறார்கள், முதியவர்களும், நோயாளிகளும் தான், உயிரிழப்பைச் சந்திக்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஒருவருக்கோ, பலருக்கோ தொற்று உறுதி செய்யப்பட்டால், இங்குள்ளதைப் போன்ற பரபரப்பு அங்கு யாருக்கும் இருப்பதில்லை.  பக்கத்து வீட்டில் இருப்பவருக்குக் கூட தெரியாது. வீட்டில் 14 நாட்கள் சுயதனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். தினமும், தாதி ஒருவர் தொலைபேசியில் அழைத்து உடல் நிலை குறித்து கேட்டறிவார். தேவைப்படும் மருந்துகளை பரிந்துரைப்பார்.யாரும் மருத்துவமனைக்குள் எடுக்கப்படுவதில்லை. மூச்சுவிடுவதில் பிரச்சினை ஏற்பட்டால் மாத்திரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுதான் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றாளர்கள் கையாளப்படும் முறை. 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால்போதும், அந்தக் கிருமி இன்னொருவருக்கு தொற்றும் தகைமையை இழந்து விடும் என்கிறார்கள். ஆக, அங்கு கொரோனா தொற்றுஏற்பட்டால்14 நாட்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தால் போதும்.   இங்கு அம்மை நோய்களால் பாதிக்கப்படுவோரை தனியாக வைத்து 11 நாட்கள், 13 நாட்கள் பராமரிப்பது போலத் தான் அங்கு நடக்கிறது.

கிட்டத்தட்ட கொரோனா என்பது சாதாரணமாக, தடிமன் வந்து போவதுபோல ஆகி விட்டது. அங்கு, பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்கும் வசதியை செய்துகொடுக்க முடியாதுஎன்பது அவர்களுக்குள்ள முக்கியமான பிரச்சினை.

அங்கு மட்டுப்படுத்தப்பட்டளவு செயற்கை சுவாசக் கருவிகள் தான் இருக்கின்றன என்பதும் இன்னொருபிரச்சினை.

இந்தக் சூழல் அவர்களை இந்த தொற்று நோயுடன் வாழப் பழக வைத்திருக்கிறது. தொற்றுஅதிகம்இருந்தாலும், அதனைஎதிர்கொண்டுபோராடும்துணிச்சலைகொடுத்திருக்கிறது. ஆனால் இங்கு நிலைமைகள் தலைகீழாக இருக்கிறது. ஒருவருக்கு தொற்று என்றதும் நாடே பரபரப்பாகிறது. குறித்த பிரதேசம் முடக்கப்படுகிறது, ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தொற்றுக்குள்ளானவர் நடமாடிய இடங்கள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஆனாலும் தொற்று தன் ஆட்டத்தை நிறுத்தியதாகத் தெரியவில்லை. இப்போது இலங்கையில் கொரோனா தனது இரண்டாவது அலை, ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசாங்கம் அதனை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இது சமூகத் தொற்று இல்லை என்கிறது.  எங்கிருந்து -யாரால் தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாத நிலை தான்சமூகத் தொற்று,.   மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தொற்று எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியாது. அதனை கண்டுபிடிக்க விசாரணை நடத்துகிறோம் என்று கூறிக் கூறியே பல வாரங்களை கடத்தி விட்டது அரசாங்கம். மினுவங்கொட அல்லது பிராண்டிக்ஸ் கொத்தணி என்று இதனைக் கூறிக் கொண்டிருக்கிறது அரசாங்கம். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது அவ்வாறு கூறக்கூடிய நிலை இல்லை என்பதை முன்னாள்சபாநாயகர்கரு ஜயசூரிய ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.அது தான் உண்மை நிலை. இப்போது இலங்கை முன்னெப்போதும் எதிர்கொள்ளாத நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கி விட்டது. ஆனால் அரசாங்கம் அதனை அடக்கி வாசிக்கிறது.

கடந்த மார்ச் மாதம், தொற்று பரவத் தொடங்கியதும், ஊரடங்குச் சட்டம், முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அந்த நிலை நீடித்தது. இப்போது, தொற்று நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால்,சிலஇடங்களில்மட்டும்ஊடரங்கு அமுலில் இருக்கிறது.சிலபகுதிகள்மட்டும்தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மினுவங்கொட கொத்தணியில் தொடங்கிய தொற்று இப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சென்றடைந்து விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொற்று அடையாளம்காணப்பட்டவர்கள் பெரும்பாலும், தனிமைப்படுத்தல் நிலையங்களில்இருந்துநிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டார்கள். ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று சுமார் 8 ஆயிரம் பேருக்கு மேல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருந்தே பெரும்பாலான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தனர்.இப்போதைய நிலைமை அப்படியில்லை.

கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்களில், வங்கிகளில், அலுவலகங்களில், ஆடைத் தொழிற்சாலைகளில், சந்தைகளில் என்று பரவலாக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்திருக்கிறது.

கொரோனா தொற்று இப்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தான்இது காட்டுகிறது. முதலாவதுஅலையின்போது, தொற்று வெலிசற கடற்படைதளத்துக்குள்ளேயும், கந்தகாடு புனர்வாழ்வு முகாமுக்குள்ளேயும் தான் சுற்றிக்கொண்டிருந்தது. அதனுடன்தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தியபோது, அங்கிருந்தவர்கள்தான் தொற்றாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். ஆனால்இப்போது, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குஅப்பால்தொற்றாளர்கள்கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களைஅமைத்துதொற்றைகட்டுப்படுத்துவதுஎன்றதிட்டம்தோல்வியைத் தழுவத்தொடங்கியிருக்கிறது. சமூகத் தொற்று என்ற விடயம் மேலெழத் தொடங்கியிருக்கிறது. இப்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள், முழு அளவில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. ஏனென்றால், அவர்களை கொண்டு செல்ல முயன்றால்,  தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடம் போதாது. அதனால் தான் அரசாங்கம் தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரிக்கும் திட்டத்தை விட, தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. இலங்கையில் இப்போது ஆறுதலடையக் கூடிய ஒரு நிலை உள்ளது என்றால், அது தொற்றாளர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்பது தான்.

இப்போதைய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டறியப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையே, சமூகத் தொற்றை நோக்கி நாடு நகருவதற்கான அறிகுறியைவெளிப்படுத்துகிறது.

யாழ்ப்பாணம் போன்ற சில இடங்களில் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அதிக சனஅடர்த்தி கொண்ட கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் நிலைமை அவ்வாறு இல்லை. இந்தநிலையில் தான், அரசாங்கம் மீண்டும் முடக்க நிலையை ஏற்படுத்தலாம் என்ற பரவலான அச்சம் காணப்படுகிறது. உயர்தரப் பரீட்சை முடிந்ததும் நாடளாவிய ரீதியான ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்ற பொதுவான நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. ஆனாலும், இதனையும் கடந்து கொரோனாவுடன் வாழப்பழகுதல், அதனை எதிர்கொள்ளப் பழகுதல் போன்ற விடயங்கள் வரும் மாதங்களில் முக்கியமான பேசுபொருளாக மாறக் கூடும். மேற்குலக நாடுகளில் கொரோனா இப்போது எப்படி ஒரு சாதாரண தடிமன் போன்று உணரப்படுகிறதோ அதுபோன்ற நிலை இங்கும் வரும் காலம் வெகுதொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை.