-சுபத்ரா

சீனத் தூதரகத்தின் ருவிட்டர் பதிவு மூலம்முதன்முதலாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷ,  பிரதமர் செயலக பிரதானியாக நியமிக்கப்பட்டமை பகிரங்கப்படுத்தப்படுகின்ற அளவுக்கு நிலைமைகள் உள்ளன.

சீனத் தூதரகத்தின் ருவிட்டர் பக்கத்தை தொடருபவர்களுக்கு,  கடந்த 15ஆம் திகதி மாலை பதிவிடப்பட்டபடத்துடன் கூடிய ஒருபதிவு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால், அந்தச் செய்தி இலங்கையில் அதற்கு முன்னர் யாராலும் அறியப்பட்டிருக்கவில்லை.

அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு விவகாரம்,  ஆனால், அரசாங்கத்தினால், அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூட இல்லை. அந்த தகவலை முதன் முதலாக சீனத்தூதரகமே பகிரங்கப்படுத்தியது. பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷ,  பிரதமர் செயலக பிரதானியாக நியமிக்கப்பட்டசெய்திதான் அது.

யோஷித ராஜபக்ஷ இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவினால், சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக பிரதமரின் வெளிவிகார ஆலோசராக அனுராதா ஹேரத் நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பாளராக கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டார். அதுபோல செந்தில் தொண்டமானுக்கும் அவ்வாறான பதவி வழங்கப்பட்டது. இந்தச் செய்திகளை வெளியிட்ட பிரதமர் செயலகம், யோஷிதராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட நியமனம் குறித்த செய்தியை மாத்திரம் தவிர்த்திருந்தது. ஏன் - எதற்கு இந்தச் செய்தி தவிர்க்கப்பட்டது என்பதல்ல முக்கியமான விடயம். அந்தச் செய்தி சீனத் தூதரகம் ஊடாக வெளியே கொண்டு வரப்பட்டது தான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரம்.

யோஷித ராஜபக்ஷ, பிரதமர் செயலக பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகிய போது, அவர் எப்படி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்- கடற்படையில் இருந்து விலகி விட்டாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

அதேவேளை,சீனத் தூதரகத்தின் ருவிட்டர் பதிவு மூலம், இலங்கை அரசாங்கத்தின் ஒரு முக்கியமான நியமனம் பகிரங்கப்படுத்தப்படுகின்ற அளவுக்கு நிலைமைகள் உள்ளன.

யோஷித ராஜபக்ஷ, பிரதமர் செயலகத்தின் பிரதானியாக நியமிக்கப்பட்ட விடயத்தை சீனத் தூதரக அதிகாரி வெளிப்படுத்தியிருப்பதும், அதற்கு முன்னரே, அவர்நேரில் வாழ்த்துக்களை கூறியிருப்பதும் முக்கியமானது. பிரதமர் செயலகத்துக்கு சென்றிருந்த போது. அந்த நியமனத்தை அறிந்து சீன தூதரக இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஹூவேய் வாழ்த்துக் கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அப்படி நடக்கவில்லை. சீன பதில் தூதுவர், இதற்கென்றே சென்று யோஷித ராஜபக்ஷவைச் சந்தித்திருக்கிறார். வாழ்த்துக் கூறியிருக்கிறார்.  அதுமாத்திரமன்றி, சீன உயர்மட்டக் குழுவின் இலங்கை பயணத்துக்குப் பின்னரான நிலைமைகள் குறித்தும் பேச்சு நடத்தியிருக்கிறார். இவ்வளவும் நடந்தது கடந்த 13ஆம் திகதி.  இரண்டு நாட்கள் கழித்துத் தான், இந்த விடயத்தை ருவிட்டரில் பதிவிட்டார் சீன இராஜதந்திரி.

இதைவிட இன்னொரு விடயமும் உள்ளது, யோஷித ராஜபக்ஷவை, சீன இராஜதந்திரி சந்தித்த போது,  அவர் பிரதமர் செயலக பிரதானியாக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றிருக்கவில்லை. கடந்த 12ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தான், யோஷித ராஜபக்ஷவை பிரதமர் செயலக பிரதானியாக நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது. மறுநாள், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அதுபற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், மறுநாளான 13ஆம் திகதியே சீன இராஜதந்திரியை அவர் சந்தித்திருக்கிறார். சீன அரசின் பிரதிநிதியாக அவர் அதிகாரபூர்வமான முறையில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். ஒக்ரோபர் 15ஆம் திகதியே தாம் பிரதானி பதவியை ஏற்றுக் கொண்டதாக உறுதிப்படுத்தியிருக்கிறார் யோஷித ராஜபக்ஷ. இதில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவது, அரசாங்கத்தில், ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் இதன் மூலம் இன்னும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது, சீனாவுக்கும் ராஜபக்ஷவினருக்கும் இடையிலான உறவுகள் தலைமுறைகளைத் தாண்டிய நெருக்கத்தை கொண்டதாக மாறியிருக்கிறது. மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவை அரசியலில் களமிறக்கினார். போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது, இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை கடற்படை அதிகாரியாக நியமித்தார்.

இதன் மூலம், தனக்குப் பின்னர், அரசியலிலும் பாதுகாப்பு நிர்வாகத்திலும், தனது பிள்ளைகள் வலுப்பெறுவதற்கு வழியேற்படுத்திக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷவின்தோல்விக்குப் பின்னர், கடற்படை அதிகாரியாக இருந்த யோஷிதராஜபக்ஷ, ஒழுங்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் அவர் கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். ஆயினும், மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில், யோஷித ராஜபக்ஷவின் திருமணத்துக்கு முதல் நாள் அவரை மீண்டும் கடற்படையில் இணைந்து பதவி உயர்வும் வழங்கினார். இதன் மூலம், திருமணத்தின் போது கடற்படைச் சீருடையில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதேவேளை, யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இருந்து விலகுவதற்கு விண்ணப்பித்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

எட்டு மாதங்களுக்கு முன்னரே தாம் அதற்கு விண்ணப்பித்திருந்ததாகவும், கடந்த 10ஆம் திகதியே பாதுகாப்பு அமைச்சு அதற்கு ஒப்புதல் வழங்கியது என்றும் யோஷித ராஜபக்ஷ இப்போதுகூறியிருக்கிறார். விலகல் உறுதி செய்யப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில் அவர் பிரதமர் செயலக பிரதானியாக நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆக, இவை எல்லாம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம்பெற்றநிகழ்வுகளாகவேஉள்ளன பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தனது செயலகத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு இரண்டாவதுமகனைக் கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம், அவர், அதிகார மட்டத்தில் தனக்கு அல்லது தன் குடும்பத்துக்கும் தெரியாத வகையில் எதுவும்நடக்கக் கூடாது என்பதை உறுதி செய்திருக்கிறார்.

மஹிந்தராஜபக்ஷ அரசியலின் மூலம் உச்சப் பதவிக்கு வந்த போது, கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் என்ற நிர்வாகப் பதவிக்கு வந்ததைப் போன்ற நிலை தான் இது. ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்கு அடுத்த தலைமுறை ராஜபக்ஷவினரை தயார் படுத்துகின்ற நடவடிக்கையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். மறுபக்கத்தில், ராஜபக்ஷவினரை சீனாவின் நண்பர்கள், செல்லப்பிள்ளைகள் என்றே பொதுவாக கூறப்படுவதுண்டு. அவர்களின் வீழ்ச்சியில் மாத்திரமன்றி எழுச்சியிலும் சீனாவுக்கு கணிசமான பங்கு உள்ளது. மஹிந்தராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர், அவரையும்,கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ போன்றவர்களையும், தமது நாட்டுக்கு அழைத்து, அவர்களை அடுத்த கட்ட நகர்வுக்கு தயார்படுத்தியது சீனா. எனவே, ராஜபக்ஷவினரின் அடுத்த கட்ட எழுச்சிக்கு சீனாவின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது, இப்போது, சீனா, ராஜபக்ஷவினரின் அடுத்த தலைமுறையினரை அரவணைக்க தொடங்கியிருக்கிறது. அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது.  யோஷித ராஜபக்ஷவுடன் தொடங்கப்பட்டிருக்கின்ற சீனாவின் ஊடாடல் அதனைத் தான் நிரூபித்திருக்கிறது.