சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் (ஐ.சி.சி) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை 2021 ஜூன் மாதம் நடத்துவதற்கு பரிசீலித்து வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது, 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இலங்கை உட்பட 9 நாடுகள் இத்தொடரில் பங்கெடுத்து வருகின்றன. 

இத்தொடரின் இறுதியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக பல டெஸ்ட் தொடர்கள்  ஒத்தி வைக்கப்பட்டதால், திட்டமிட்டபடி இறுதிப்போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந் நிலையிலேயே இறுதிப் போட்டியை அடுத்த வருடம் ஜூன் மாதம் நடத்த ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.

கொரோனாவினால் இரத்து செய்யப்பட்ட போட்டிகளுக்கு ஒவ்வொரு அணிக்கும் சம புள்ளிகள் வழங்க முன்மொழியப்பட்டது.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி அணிகள் பெற்ற புள்ளிகள், மற்றும் அடுத்த ஆட்டங்களின் மூலம் அணிகள் பெறப் போகும் புள்ளிகள் அடிப்படையில் முதலிரு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கு நுழையும்.

எனினும் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்பில் நவம்பர் மாதம் இடம்பெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போதே இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.