அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி டெனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை புளோரிடாவில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தேர்தல் 3 ஆம் திகதி என்றபோதிலும், முன் கூட்டியே வாக்களிக்கும் முறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாநிலத்துக்கு நேற்று சென்ற ட்ரம்ப், அங்குள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். 

இதன்போது வழமையாக முகக் கவசம் அணிவதை புறக்கணித்து வந்த ட்ரம்ப் முகக் கவசம் அணிந்திருந்தமையும் விசேட அம்சமாகம்.

வாக்களித்து விட்டு, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய ட்ரம்ப் ஊடகவியலாளர்களிடம், "நான் ட்ரம்ப் என்ற ஒருவருக்கு வாக்களித்தேன்" என்று நகைச்சுவையாக கூறினார்.

அமெரிக்காவில் இதுவரை சுமார் 57 மில்லியன் மக்கள் தமது வாக்கினை பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.