(ஆர்.ராம்)
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றபோது ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் உறுப்பினர்கள் பங்காளிக்கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து முரண்பட்டமையால் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் ஐக்கியமக்கள் சக்தியின் இளம் உறுப்பினர்கள் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் கூட்டத்திலிருந்து வெளியேறியபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்காக திகாம்பரம் களமிறங்கியதால் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 


அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பாடுகள் தொடர்பில் சிரேஸ்ட உறுப்பினர்களான ஏரான் விக்கிரமரட்ன மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தமது கடுமையான அதிருப்தியையும் வெளியிட்டனர்.

நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் கூட்டம் நேற்று முன்தினம் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷரப்பிடம் 20ஐ எதிர்த்த நீங்கள் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆதரிக்கும் 17ஐ ஏன் ஆதரித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியவாறு ஆக்ரோஷமான கருத்துக்களை வெளியிட்டார். 

இதன்போது முஷரப்பும் 20ஆவது திருத்தில் உள்ள 57சரத்துக்களில் சிலவற்றைக் குறிப்பிட்டு இவை தொடர்பில் ஏன் ஐக்கிய மக்கள் சக்தி கரிசனை கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் 17ஆவது சரத்து சிறுபான்மையினருக்கு பாதகமில்லை என்றும், மேலும் அச்சரத்து குறித்து ஐக்கியமக்கள் சக்தி விசேட தீர்மானமொன்றை எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கடுமையான வாதப்பிரதிவாதங்கள் எழுந்த நிலையில் முஷரப் அக்கூட்டத்திலிருந்து வெளியேறினார். 

அத்துடன் 20இற்கு ஆதரிப்பதா இல்லையா 17ஐ அங்கீகரிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸே ஆகும். இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானங்களுடன் இணைந்து பயணிக்க முடியுமானால் ஒன்றிணைந்து செல்லமுடியுமே தவிர அவர்களின் கட்டளைகளுக்கு செயற்படும் இயந்திரபொம்மைகள் நாம் அல்ல என்று முஷரப் எம்.பி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, முஸ்லிம்காங்கிரஸின் தலைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் அவர் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் இளம்பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மிகக்கடுமையாக ஹக்கீமையும், 20இற்கு ஆதரவளித்த மு.க.உறுப்பினர்களையும் விமர்சித்தார்கள்.  ஒருகட்டத்தில் கடுமையான வார்த்தை பிரயோகங்கள் வெளிவரவும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் உடனடியாக தலையீடு செய்தார். 

ஹக்கீம் வாக்களிக்கவில்லை. அவர் பங்காளிக்கட்சியாக நேர்மையாகவே செயற்பட்டிருக்கின்றார். அவருடைய கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தான் ஆதவளித்துள்ளார்கள். அதுபற்றி அவர் ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். இதனைவிடுத்து பங்காளிக்கட்சி என்பதை மறந்து விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்ற செயற்பாடாகும். 

இவ்வாறு முறையற்ற விவாதங்களை தொடர்வதாக இருந்தால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவையா இல்லையா என்பதை முதலில் கூறிவிட்டு பின்னர் உங்களுடைய விமர்சனங்களை தெரிவியுங்கள் என்று கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்கிரமரட்ன போன்றவர்களும் இளம் உறுப்பினர்களின் நடவடிக்கைள் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டனர். 

எனினும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 22 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மகஜரொன்றை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.