இதுவரை கொரோனா வைரஸ் தொடர்பில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை  தொடர்பிலேயே பேசப்பட்டு வந்தது. 

தற்பொழுது பேலியகொடை மீன் விற்பனை நிலையம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

பேலியகொட  மீன் விற்பனை நிலையத்தை பொறுத்தமட்டில் கொழும்பில் மாத்திரமன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் மீன் விற்பனைக்கும்  கொள்வனவுக்கும் பெருந்தொகை  மக்கள் வருவது சதாரணமாக நடக்கும் செயலாகும்.

அந்த வகையில்  பேலியகொடை மீன் சந்தையில் இந்த நிலை உருவாகி  நாட்டின் பல பகுதிகளுக்கும் அது பரவி உள்ளது. 

இதுவரை  கொரோனா வைரஸின் இரண்டாம் அலை அண்டாத வடக்கு, கிழக்கு,  மலையகம் என சகல பிரதேசங்களிலும் தற்பொழுது நோய்த்தொற்று வியாபித்து வருகின்றது.

இந்த நிலையிலும் பலரும் அதனை உதாசீனம் செய்யும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் நடந்து கொள்வதுதான் மிகவும் கவலைக்குரியது .

நோய் தொற்றாளர்கள் வைத்தியசாலையை விட்டு தப்பி ஓடி வருவதும், மக்கள் அதிகம் கூடும் பிரதேசங்களான பல்பொருள் அங்காடிகளுக்கு செல்வோர் அங்குள்ள சுகாதார விதிமுறைகளை  உதாசீனம் செய்வதும் தொடர்கிறது.

இந்த நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்: 

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியில் இருந்து கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது சமூக தொற்று என்றும். 

இதேவேளை கொரோனா தொற்று பரவக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்ட பின்னர் உடனடியாக அப்பகுதியை முடக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்தாவிட்டால் வைரஸ் தொற்று பெருமளவில் பரவக்கூடும்.

தொற்று ஏற்கனவே 13 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. மேலும் ஐந்து மாவட்டங்களில் பெரிய துணைக் கொத்துகள் பதிவாகியுள்ளன.

இந்த துணைக் கொத்துகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தக் கட்டத்திலேனும் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்