பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிய மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்தை பிரிவில் வசிக்கும் நபருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து  தனிமை படுத்தப்பட்டிருந்த அவரது மனைவி உட்பட இரு குழந்தைகள் நேற்று 24 ஆம் திகதியன்று  இரவு இராணுவத்தினரால் பல்லேகலை தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மஸ்கெலியா வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் பணிபுரிந்த மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட  நிலையில் அவரை வவுனியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் மேற்கண்ட நபர் இம்மாதம் 16 ஆம் திகதியன்று பேலியகொட மீன் சந்தையில் இருந்து அவரது வீட்டிற்கு வந்ததாகவும் 19ஆம் திகதியன்று மீண்டும் பேலியாகொட சந்தைக்கு சென்றதாகவும் அவரது வீட்டார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதியன்று பேலியாகொடவில் வைத்து மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்ப அங்கத்தவர்களை தனிமை படுத்தியதாக மஸ்கெலியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

அவர் மஸ்கெலியா நகருக்குச் சென்று மஸ்கெலியா ஆலயம், நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள சொந்தகாரர்கள்  வீடுகளுக்கும் சென்றுள்ளதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் கூறியுள்ளார்.

ஆகையால் மஸ்கெலியா பிரதேச சபையினால் மஸ்கெலியா நகர், ஆலயம், பாடசாலை மற்றும் கங்கேவத்தை பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.