அன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு,

25 Oct, 2020 | 12:32 AM
image

அன்புடன் முத்தையா  முரளிதரன் அவர்களுக்கு,

  

உங்களை மையமாக வைத்து சில தினங்களாக மூண்டிருந்த சர்ச்சை உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் காரணத்தால்  உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

    

பத்து வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  800 விக்கெட்டுக்களை நீங்கள் கைப்பற்றியபோது அந்த சாதனைக்காக உலகம் உங்களை திரும்பிப்பார்த்தது. இன்று மீண்டும் ஒரு 800 காரணமாகவே உலகின் கவனம் உங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. இந்தியாவில் உங்களது வாழ்க்கைக் கதையை 800 என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கும் முயற்சியே சர்ச்சையை தோற்றவித்தது. அந்தப் படத்தில் உங்கள் வேடத்தில் தமிழக இளம் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு தென்னிந்திய மாநிலத்தை அல்லது வடநாட்டைச் சேர்ந்த நடிகர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தால் இந்த சர்ச்சை கிளம்புவதற்கு வாய்ப்பிருந்திருக்காது. தமிழரான சேதுபதி உங்கள் வேடத்தில் நடிக்கக்கூடாது என்பதே  சர்ர்சையை கிளப்பிய சக்திகளின் நோக்கமாகும். சேதுபதிக்கு மாத்திரமல்ல, வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கூட இதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.

இன்று உங்களை அரசியல் காரணங்களுக்காக  நேர்மறையான படிமத்தில் விமர்சிக்கின்ற இந்த சக்திகள் நீங்கள் சாதனை படைத்து கிரிக்கெட் உலகின் சிகரத்தில் நின்றபோது  அது ' ஒரு தமிழனின் சாதனை ' என்று பெருமைப்பட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்கள் பல தடவைகள் சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்தீர்கள். நீங்கள் பந்துவீசும் பாணியும் கேள்விக்குள்ளாகியது. அவற்றையெல்லாம் மனவுறுதியுடன் வெற்றிகொண்ட நீங்கள் திரைப்பட விடயத்தில் பின்வாங்கியிருப்பது சற்று தடுமாற்றத்தை தருகிறது.

 உங்கள் மீதான தவறான புரிதலால் '800 ' திரைப்படத்தில்  இருந்து விலகவேண்டும் என்று சேதுபதிக்கு குறிப்பாக தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடம் இருந்தும் கடுமையான நெருக்குதல்கள் கொடுக்கப்படுவதாகவும் உங்களால் தமிழகத்தின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள். சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களிலும் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையால் அவரை திரைப்படத்தில் இருந்து விலகுமாறு டுபாயிலிருந்து அறிக்கை மூலம் கேட்டிருந்தீர்கள். அவரும் ' நன்றி, வணக்கம்' என்று திரைப்படத்தின் முடிவில் காட்டுவதைப் போன்று கூறி சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் . உங்களிடமிருந்து அத்தகைய வேண்டுகோள் ஒன்றுக்காக காத்திருந்தவர் போன்றே  அவரின் நடவடிக்கை எனக்குத் தெரிகிறது. 

2010 ஜூலையில் காலியில் இந்திய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டமே உங்களுடைய இறுதி டெஸ்ட் ஆட்டம். அதில் தான் வரலாற்றுப் பெருமைமிக்க 800 வது விக்கெட்டை  கைப்பற்றினீர்கள்.அதுவே டெஸ்ட் ஆட்டங்களில் உங்களது இறுதிப் பந்து வீச்சாகவும் வரலாற்றில்  இடம்பிடித்துக்கொண்டது. அந்த நேரத்தில் உங்கள் மீது குவிந்த புகழ்மாலைகளை ஒரு கணம் நினைத்துப்பார்க்கிறேன்.

 சாதனை நாயகனான உங்களின் சகாக்கள் களிப்பின் மிகுதியில் உங்களை தோளில் தூக்கி வலம்வரவே காலி கிரிக்கெட் அரங்கு கொண்டாட்டங்களில் மிதந்தது.' 18 வருட கிரிக்கெட் வாழ்வில் ஒரு வீரர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை கைப்பற்றுவது என்பது கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை,சந்திரனில் காலடி வைப்பதற்கு ஒப்பான சாதனையல்ல, அதையும் மீறி  வேற்றுக்கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு ஒப்பானது ' என்று அந்த வேளையில் இந்திய ஆங்கில பத்திரிகையொன்றில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் எழுதியதை வாசித்த ஞாபகம் இருக்கிறது.

 டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து  அன்றைய தினமே நீங்கள் ஓய்வுபெற்றபோது காலியில் அளிக்கப்பட்ட கோலாகலமான பிரியாவிடை போன்ற நிகழ்வை கிரிக்கெட் உலகம் முன்னென்றுமே கண்டதில்லை.சோபர்ஸுக்கோ, பிரட்மனுக்கோ, கவாஸ்கருக்கோ கூட அத்தகைய பிரியாவிடை அளிக்கப்பட்டதில்லை என்று  கூட கூறப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நீங்கள் முக்கியமானவராக இருந்ததைப் போன்று வேறு எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தனது தேசிய அணிக்கு முக்கியமானவராக இருந்ததில்லை  என்றும் பத்திரிகைகள் அந்த நேரத்தில் எழுதின.கிரிக்கெட் உலகின் மகத்தான பந்து வீச்சாளர்களில் ஒருவராக என்றென்றைக்கும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கப்போகும்  முரளிதரனின் சாதனைகளை அண்மைய எதிர்காலத்தில் எந்தவொரு பந்து வீச்சாளரினாலும்  முறியடிப்பது சாத்தியமானதே அல்ல.800 டெஸ்ட் விக்கெட் சாதனை ஒருபோதும் முறியடிக்கப்படப்போவதில்லை என்று இலங்கை அணியினரால் பெரிதும் வெறுக்கப்பட்ட  அவுஸ்திரேலிய  அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ண் கூறியிருந்தார்.இன்னொரு முரளிதரனை தேட ஆரம்பித்தால் அது வீணான முயற்சியாகவே முடியும் ; ஒரேயொரு முரளிதரன்தான் இருக்கமுடியும் என்று காலி மைதானத்தில் வைத்து இலங்கை அணியின் அன்றைய  தலைவரான குமார் சங்ககார கூறியது இன்னமும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.  

இத்தகைய புகழுக்குரிய  உங்கள் மீது ஒரு தவறான பார்வை ஏன்வந்தது? இலங்கை உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் அரசுக்கு எதிராக குரலெழுப்பாமல் ' இனப்படுகொலையை மூடி மறைத்ததாக உங்களை இந்த சக்திகள் குற்றஞ்சாட்டுகின்றன. போர் முடிவுக்கு வந்தபோது அதுவே உங்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய நாள் என்று நீங்கள் கூறியதை சுட்டிக்காட்டி அவர்கள் தங்களது செயல்களை நியாயப்படுத்துகிறார்கள். திரைப்படத்துக்கு எதிரான சர்ச்சை  தீவிரமடைந்த நிலையில் நீங்கள் விடுத்த அறிக்கையில் போர் முடிவுக்கு வந்ததால் இனிமேல் இலங்கை மக்கள் அமைதியாக வாழலாம் என்பதாலேயே நீங்கள் அதை வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என்று வர்ணித்ததாக கூறியிருந்தீர்கள். அதற்குப் பிறகாவது அவர்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடவில்லை. இலங்கைத் தமிழனாக பிறந்தது தான் நீங்கள் செய்த தவறா என்றும் கேட்டிருந்தீர்கள்.இறுதியில் அவர்கள்தான் வென்றிருக்கிறார்கள். 

ஒரு திரைப்படம் வெளிவந்த பிறகுதான் விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால், இப்போதெல்லாம் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.தயாரிப்பையும் தடுத்துவிடுகிறார்கள். கலையுலகைச் சேர்ந்தவர்கள் மிரட்டல்களால் அடிபணிய வைக்கப்படுவது தமிழகத்தில் ஒன்றும் புதியதல்ல.முன்னரும் இத்தகைய பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கிறது.உண்மையான பிரச்சினை என்னவென்றால்,  சமூகத்தில் சகிப்புத்தன்மை அருகிக்கொண்டு போவதேயாகும். இது இன்று கவலைக்குரிய வகையில் உலகளாவிய ஒரு தொற்று நோயாக பரவி வருகிறது.

மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை அடாவடித்தனமான முறையில் ஒடுக்க முயற்சிக்கின்ற சக்திகளின் கையோங்குவதற்கு அடிப்படைக் காரணம் நிதானமாகச் சிந்திக்கக்கூடிய பெரும்பான்மையானவர்கள் சாதிக்கும் மௌனமேயாகும். மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் தாங்கள் சொல்வது மாத்திரமே  சரியானது என்று பிடிவாதமாக நிற்கின்ற சக்திகளின் நிலைப்பாடுகள் சமூகத்தின் சிந்தனைப்போக்கை அல்லது அரசியல்வாதப் பிரதிவாதிகளின் போக்கை நிர்ணயிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதே எனது உறுதியான நம்பிக்கையாகும்.  

 800 திரைப்படத்துக்கு எதிரான பிரசாரங்களில் முக்கிய பங்கு வகித்தவை சமூக ஊடகங்களாகும்.இன்று அவை அந்தக்காலத்தில் சுவர்களில் மற்றவர்களைப் பற்றி அவதூறாக கரியால் எழுதுவதை ஒத்தவையாக மாறிவிட்டன. பொதுவெளியில் கருத்துக்களை வெளியிடும்போது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்ற அடிப்படைப் பண்பே இல்லாத பெருவாரியானவர்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறாhர்கள்.  

விஜய் சேதுபதியின் மகளுக்கு  பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் விடுத்து சமூக ஊடகங்களில் பதிவுகள் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை பொலிசார் விசாரணை செய்வதாக ஒரு செய்தியையும் படித்தேன். தற்போது டுபாயில் நடைபெற்றுவரும் இந்தியன் பிறிமியர் லீக்  கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் ஆத்திரமடைந்த சிலர் அணியின் தலைவரான மகேந்திரசிங் டோனியின் ஐந்து வயது மகளையும் மனைவியையயும் பாலியல்கொடுமைக்கு உட்படுத்தப்போவதாக சமூக ஊடகத்தின் மூலமாக விடுத்த அச்சுறுத்தல் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். கனவான்களின் விளையாட்டில் தோற்றாலும் கற்பழிப்பை எதிர்நோக்கு நிலை...........!

திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து நண்பர் ஒருவர் நகைச்சுவையாக என்னிடம் கூறியதை  உங்களுக்கு கூறிவிட்டு கடிதத்தை முடிக்கிறேன்.  " வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படத்தில்  கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன் வேடத்தில் வீ.கே.இராமசாமி நடித்தார். கட்டப்பொம்மனைத் தூக்கிலிட்ட வெள்ளைக்காரத்துரையாக ஜாவர் சீத்தாராமன் நடித்தார். அன்று படம்  பார்த்தவர்கள் இருவரின் வீடடுகளுக்கும் கற்களையா வீசினார்கள்.படங்களில் பாத்திரங்களை பாத்திரங்களாகவே பார்க்கவேண்டும்.நிழலுக்கு நிஜத்துக்கும் இடையே வித்தியாசம் தெரியாத பிறவிகள்.

இப்படிக்கு

ஊர்சுற்றி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13