நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகும் பகுதிகளுக்கு  பொலிசாரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவருகின்றது. 

இந்நிலையில், மேல் மாகாணத்தின் களுத்துறை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இதுவரை  51 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக இன்று மாலை 07 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில்  கொத்தட்டுவ, முல்லேரியா பொலிஸ் பிரிவுகளுக்கு  தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டதையடுத்து.  

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் பிரிவுகளில் தெமட்டகொட, மருதான, கொட்டஹேன, மட்டக்குளி, முகத்துவாரம், ப்ளூமெண்டல், வெல்லம்பிட்டி மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பகுதிகளுக்கு  ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்பா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவல, பயகல மற்றும் அலுத்கம பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் 26 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளுக்கு  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வில்லை என போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, நாட்டின் பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்படுதல் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளூடாக வாகனங்கள் பயணிக்க முடியும் என்ற போதிலும், வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க முடியாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், அத்தியாவசிய சேவைகள் செயல்பட முடியும் என்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்கள் வீடுகளில் இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.