(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி தற்போதுள்ள அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையைத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இது குறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற நாணயச்சபைக்  கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானிப்பட்டுள்ளது.  இதன்மூலம் தற்போதுள்ள அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  

இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கியினால் முன்னொருபொழுதுமில்லாத வகையில் எடுக்கப்பட்ட நாணய தளர்த்தல் நடவடிக்கைகளைத்  தொடர்ந்து,  ஒட்டுமொத்த சந்தை கடன் வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியொன்று  அவதானிக்கப்பட்டதுடன், சந்தை கடன் வழங்கல் வீதங்களில் பரந்தளவிலான கீழ்நோக்கிய திருத்தத்தின் தொடர்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதனுடாக தற்போது காணப்படுகின்ற  தாழ்ந்தளவிலான  பணவீக்க சூழலில் பொருளாதாரத்தில் திறன்மிக்க துறைகளுக்கு வசதியான கொடுகடன் பாய்ச்சல்கள்  உறுதி செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.