(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. ஆணைக் குழுவின்  இரகசிய  சாட்சிப் பதிவுகளின் போது,  சாட்சி விசாரணை அறையிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்படும் நிலையில், ஆணைக் குழுவுக்கு வெளியே இரகசிய சாட்சிப் பதிவுகள் முடிவுறும் வரை காத்திருக்கும் போது இந்த இடையூறுகளை ஊடகவியலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

 கொவிட் 19 தொற்று பரவலை காரணம் காட்டி, ஆணைக் குழுவில் அமைந்துள்ள  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில்  ஆணைக் குழுவை அன்மித்த பகுதிகளில் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தையும்,  அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இந் நிலையில் நாளாந்தம்  ஊடகவியலாளர்கள் பல மணி நேரம் வெளியே ஆங்காங்கே நின்றவாறு, தமது அறிக்கையிடல் தயார்படுத்தல்களை முன்னெடுத்து வந்தனர்.

 இந் நிலையில் நேற்றைய தினம்,  அவ்வாறு  ஆணைக் குழுவை அண்மித்த பகுதியில் இருந்தவாறு ஊடகவியலாளர்கள் தமது அறிக்கையிடலை தயார் செய்துகொண்டிருந்த போது, அங்கு வந்த பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பிரதான நிறைவேற்று அதிகாரி  சுனில் திஸாநாயக்க தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரை திட்டியுள்ளார். அத்துடன் அவ்வாளகத்துக்கு வெளியே செல்லுமாறும் அவர் கடும் தொனியில் பணித்துள்ளார்.

 இதனையடுத்து அங்கிருந்த சுமார் 15 ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் அம் மண்டபத்தின் நிறைவேற்று அதிகாரியை சந்தித்து விளக்கம் கோரினர்.

 இதன்போது தான்  பயன்படுத்திய வசனங்கள் மற்றும் நடந்துகொண்ட முறைமைக்கு அவர் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரிய போதும், ஊடகவியலாளர்கள், ஏற்கனவே அறிக்கையிடல்களை முன்வைத்த போது இருந்த இருக்கை வசதிகளை மீள அளிப்பது தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்டார். அத்துடன் அது தொடர்பில் ஆணைக் குழுவின் செயலரை சந்தித்து ஒழுங்குகலை செய்துகொள்ளுமாரும் அவர் கூறினார்.

  இதனையடுத்து ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் செயலர் புவனேக ஹேரத்தைச் அந்திக்க சென்றனர். இதன்போது ஒரு ஊடகவியலாளரை மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதித்த அவர், ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடுவதில் பலனில்லை என அவரிடம் தெரிவித்துள்ளார்.

 இதனால் இதுவரை ஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்த வண்ணம் ஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 இந் நிலையில் இவ்விடயத்தை ஊடகவியலாளர்கள், தீவிரமாக   ஆலோசிக்க ஆரம்பித்த நிலையில் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு பின்னர் பிளாஸ்டிக் இருக்கைகள் சிலவற்றை , பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப நிர்வாகம் எடுத்து வந்து, ஆணைக் குழுவு சாட்சி விசாரணை அறைக்கு செல்லும் பாதையில்  வரிசையாக  வைத்துள்ளனர்.