தென்கொரியாவில் 17 வயதுடைய இளைஞனின் மரணத்திற்கும் காய்ச்சல் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை காய்ச்சலுக்கு தடுப்பூசி பெற்ற குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த உயிரிழப்புகளுக்கும் தென்கொரிய அரசாங்கம் நடத்தும் தடுப்பூசி திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, தென்கொரியாவில் பருவ காய்ச்சலுக்கு எதிராக 1 கோடியே 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு கொரோனா வைரஸ் பரவலுடன் போராடுவதால் பருவகாய்ச்சல் ஏற்படுவதைத் தடுப்பூசி தடுப்பதாக நம்புகிறார்கள்.

தடுப்பூசி பெற்ற பின்னர் உயிரிழந்தவர்களில்  17 வயது சிறுவனும் ஒருவர். இந்நிலையில், அந்நாட்டின் தடயவியல் நிறுவனம்  தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும்  உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்கொரிய பிரதமர் சுங் சை-கியூன் இரங்கல் தெரிவித்து, இறப்புகளுக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தடுப்பூசிகள் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

"இதுவரை, வல்லுநர்கள் தடுப்பூசிகளுக்கும் இறப்புகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகக் தெரிவித்தனர், ஆனால் பல குடிமக்கள் கவலையுடன் இருக்கிறார்கள்," என அவர் தெரிவித்துள்ளார்.

கொரிய தடுப்பூசி சங்கம் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்தை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நாடு தழுவிய திட்டத்தை ஒத்திவைப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சுகாதாரத் தொழிலாளர் சங்கமான கொரிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

"காய்ச்சல் தடுப்பூசிகள் தொடர வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். தடுப்பூசியை முற்றிலுமாக நிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை அழைக்கவில்லை, ஆனால் தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு அதை நிறுத்திவைக்க [மரணத்திற்கான] சரியான காரணத்தைக் கண்டறிய தற்காலிகமாக ஒத்திவைக்க பரிசீலிக்க வேண்டும் என கொரிய மருத்துவ சங்கம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்ப்ளூயன்சா பருவம் வழக்கமாக நவம்பர் இறுதிக்குள் தொடங்குகிறது, மேலும் இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இணையாக இயங்கினால், அது பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான அபாயங்களை அதிகரிக்கும் என்ற அச்சங்கள் உள்ளன.

 ஒவ்வொரு ஆண்டும் தென் கொரியாவில் சுமார் 3,000  காய்ச்சலுடன் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகின்றன.