சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

கடந்த வாரம் சத்தமில்லாமல் அரசியல் பூகம்பம் நிகழ்ந்தது. இதற்கு ரோம் திரைப்பட விழாவில் முதற்தடவையாக திரையிடப்பட்ட ஒரு விவரணச் சித்திரம் காரணம்.

இதில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் ஒருபாலின உறவுகள் பற்றிப் பேசியிருந்தார். ஒருபாலின உறவில் நாட்டம் கொண்டவர்கள் சேர்ந்து வாழ்வதை அங்கீகரிக்க வேண்டும் என்பது அவரது கருத்து.

ஆணோ, பெண்ணோ, விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ்தலை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள் ஆரவாரமாக வரவேற்றார்கள். திருமணம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான பந்தமே தவிர, வேறொன்றும் இல்லை என்பவர்கள் ஆத்திரப்பட்டார்கள்.

பாப்பரசரின் கருத்தை கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைப்பாடாக ஏற்பதா? அல்லது திருச்சபையின் போதனைகளுக்கு அப்பாற்பட்டதென நிராகரிப்பதா? என்ற விவாதங்கள் தீவிரம் பெற்றன.

பெண் ஆணுக்காகவும், ஆண் பெண்ணுக்காகவும் படைக்கப்பட்டவர்கள் என்று ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை போதிக்கிறது. இருவரும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் மாத்திரமே திருமணம் நிகழ வேண்டும் என்கிறது.

இருவரும் பரஸ்பர நன்மை பெறுவதற்காக, சுயாதீனமான சம்மதத்துடன், சந்ததியைப் பெருக்கும் நோக்கத்துடன் இடம்பெறுவது தான் திருமணம் என்பதை திருச்சபையின் திருமணச் சட்டம் வலியுறுத்துகிறது.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு மத்தியிலான பாலியல் உறவை வரலாறு தொட்டு திருச்சபை பாவச்செயலாக கருதுகிறது. சமகால உலகின் அரசியல், சமூகம், பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இது பற்றி பல தடவைகள் திருச்சபை விளக்கம் அளித்தது.

சமூகத்தில் ஆதிகாலம் தொட்டு ஒருபாலினச் சேர்க்கைக்கான போக்குகள் இருந்தன. அவை தவறானவை அல்ல. எனினும், அவை ஒருபாலின உறவின் மீதும் நாட்டத்தை ஏற்படுத்துகின்றன. அது ஒழுங்கீனத்தை ஏற்படுத்தக்கூடியது என்று போதித்தது.

ஒருபாலினச் சேர்க்கை பற்றிய வத்திக்கானின் (The Congregation for the Doctrine of the Faith) நிலைப்பாடு, கடைசியாக 2003ஆம் ஆண்டு அறிக்கையாக வெளியிடப்பட்டது. இது ஒருபாலின சேர்க்கையாளர்களை கௌரவமாக நடத்துவது பற்றி பேசுகிறது.

ஒருபால் உறவில் நாட்டம் கொண்டவர்களை மதிக்கலாம். ஆனால், அந்த மதிப்பானது எந்தவகையிலும் ஒருபாலின நடத்தையை அங்கீகரிப்பதாகவோ, ஒருபாலினத்தவர்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கையை அங்கீகரிப்பதாகவோ இருக்கக்கூடாது என்று கூறுகிறது.

டெலிவிசா என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி, கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட பிரான்செஸ்கோ என்ற திரைப்படத்தில், பாப்பரசர் கூறும் கருத்துக்கள் திருச்சபையின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை.

ஒருபாலின சேர்க்கையாளர்கள் ஒரு குடும்பமாக வாழக்கூடிய உரிமை உடையவர்கள். கடவுளின் குழந்தைகள். 

அவர்களை குடும்பத்தில் இருந்து உதைத்து வெளியேற்றவோ, அவர்களது வாழ்க்கையை இழிவானதாக மாற்றவோ முடியாது என பாப்பரசர் கூறுகிறார்.

அவரின் வார்த்தைகளிலே சொல்வதாயின், ஆட்கள் ஒன்று சேர்ந்து வாழும் வாழ்க்கையை வரையறுக்கக்கூடிய (சிவில் யூனியன்) சட்டமொன்று வேண்டும், அதன்மூலம் அவர்கள் சட்டரீதியான பாதுகாப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிடலாம்.

உண்மையிலேயே பாப்பரசர் அவ்வாறு கூறினாரா? அப்படியானால், ஏன் அவ்வாறு கூறினார்? அதன் அடிப்படையில் கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகளை மாற்ற வேண்டுமா? போன்றவை சமகாலத்தின் முக்கியமான கேள்விகள்.

இதனை பால் (Sex), பால்நிலை (Gender) பற்றி மாறி வரும் பார்வைகள், ஆண்-பெண் உறவைத் தாண்டி பரந்து பட்டதாக மாறி வரும் தன்பாலின மற்றும் இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள், பால்மாற்றம் செய்து கொண்டவர்களின் (LGBT) உரிமைகள் பற்றிய கருத்தாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

LGBT என்ற வரையறைகளுக்குள் அடங்குபவர்களும் மனிதர்கள் தான், அவர்களது உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான ஆதரவு வளர்ந்து வருகிறது.

25இற்கு மேற்பட்ட நாடுகள் ஒருபாலினத் திருமணங்களை அங்கீகரித்துள்ளன. பல நாடுகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதி வழங்குகின்றன.

பொதுவாக, இத்தகைய உறவுகளை அங்கீகரித்த நாடுகளில் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி கண்ட நாடுகளும், மதச்சார்பின்மை கோட்பாடுகளை நோக்கி நகரும் சமூகஙக்ளைக் கொண்ட நாடுகளும் அதிகம். 

எனவே, ஒருபாலினத்தவர்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கையை அங்கீரிக்க வேண்டும் என்ற குரல் வலுவானதாக ஒலிக்கிறது.

ஆர்ஜென்ரீனாவின் வறிய சமூகமொன்றில் பிறந்து, முதலாளித்துவத்திற்கு எதிராக குரல் எழுப்பி, பொருளாதார தாராளமயவாதத்தை ஆட்சேபிப்பதன் மூலம், தம்மை இடதுசாரி என்ற நிலைக்குள் பொருத்திக் கொண்ட  பாப்பரசர், பால்நிலை பற்றிய சமூக மாற்றக் கோரிக்கையை ஏற்கும் வகையில் திருச்சபையின் போதனைகளை மறுதலிக்கிறாரா? என்று கன்சர்வேட்டிவ் கொள்கைகளை அனுசரிப்பவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

முதலில், பிரான்செஸ்கா என்ற விவரணத்தில் பாப்பரசரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்ட விதத்தை ஆராய வேண்டும். 

ஒரு வருடத்திற்கு முன்னதாக, பாப்பரசர் டெலிவிசா  நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். முழுமையான பேட்டியும் வத்திக்கானிடம் இருந்திருக்கிறது.

பேட்டியில் கூறப்பட்ட விடயங்களில் எதனை ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்ற உரிமை வத்திக்கானுக்கு உள்ளது. 

டெலிவிசா நிறுவனத்திற்கு வத்திக்கான் எடிட் செய்து அனுப்பிய வீடியோவில் சிவில் யூனியன் பற்றி பாப்பரசர் கூறிய கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என்று மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

உண்மையில், பிரான்செஸ்கா என்ற விவரணச் சித்திரம், பாலியல் துஷ்பிரயோகம் முதலான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்பு. 

அது பற்றி பாப்பரசர் வழங்கிய பழைய பேட்டியில், ஒருபாலினத்தவர்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் பொருத்தமின்றி எடுத்தாளப்படப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த விவரணத்தில் பாப்பரசர் கூறிய கருத்துக்கள் ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டன என்ற குற்றச்சாட்டும் உண்டு. 

தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவு (Civil cohabitating) என்ற பதம், விவரணத்திற்கான சப்டைட்டில் விளக்கக் குறிப்புக்களில் ஒன்றுகூடி வாழ்தல் (Civil union) என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என சிலர் வாதம் புரிகிறார்கள்.

இருந்தபோதிலும், ஒருபாலினத்தவர்கள் ஒன்றுகூடி வாழும் வாழ்க்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்குவது பற்றி பாப்பரசர் இதற்கு முன்னதாகவும் பேசியிருக்கிறார். 

அவர் ஆர்ஜென்ரீனாவின் பேராயராக இருந்த சமயம், ஒருபாலினத் திருமணத்திற்கு மாற்றாக ஒருபாலினத்தவர்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கையை அங்கீகரிக்கலாமென கூறியிருக்கிறார்.

2014ஆம் ஆண்டு தாம் அளித்த பேட்டியொன்றில், பொருளாதார கண்ணோட்டத்தில், சமூகப் பிரச்சனைகளை விபரித்து, ஒன்றுகூடி வாழ்தல் என்ற விடயத்தை பன்முக நோக்குடன் ஆராய வேண்டும் என்று பாப்பரசர் குறிப்பிட்டிருக்கிறார். 

வேறுபட்ட தன்மைகளின் அடிப்படையில் பிரச்சனையை மதிப்பிட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

இதில் பிரச்சனை என்னவென்றால், பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கள் உருவாக்கியுள்ள வாதப் பிரதிவாதங்கள் பற்றி வத்திக்கான் உத்தியோகபூர்வமாக எதனையும் கூறவில்லை. 

பாப்பரசரின் தரப்பில் இருந்தும் எதுவித விளக்கமும் வெளிவரவில்லை. அனுமானங்களின் அடிப்படையிலான கருத்துக்களால் கத்தோலிக்கத் திருச்சபை பிளவுபட்டுள்ளது.

தம்மை லிபரல் கத்தோலிக்கர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், தன்பால் உறவில் நாட்டம் கொண்டவர்கள் மீது பாப்பரசர் கொண்ட அனுதாபத்தை வரவேற்றுப் பேசுகிறார்கள். இது ஒருபாலினத் திருமணங்களை அங்கீகரிப்பதற்கான முதற்படி என்கிறார்கள்.

எனினும், ஒருபாலினத் திருமணங்களை நிராகரிக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் பாப்பரசரின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பொது இணக்கப்பாட்டை எட்டுதல் என்பது இலகுவான விடயம் அல்லவென என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கன்சர்வேட்டிவ் கொள்கைகளை அனுசரிப்பவர்கள் பாப்பரசர் மீது காரசாரமான குற்றச்சாட்டை முன்வைப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

உலகில் தற்போது தோன்றியிருக்கும் ஒருபாலின அலையை அங்கீகரிப்பதானது, கத்தோலிக்க போதனைகளை ஒருபாலினம் சார்ந்ததாக மாற்றுவது போன்றதாகும் என்ற குற்றச்சாட்டு முக்கியமானது.

பாப்பரசர் கூறிய கருத்துக்கள், கிறிஸ்தவ சமூகத்தில் மாத்திரமன்றி, ஏனைய மதங்களை அனுசரிக்கும் சமூகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

ஐரோப்பிய தேவாலயங்கள் மற்றும் ஆபிரிக்க தேவாலயங்கள் மத்தியில் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளன.

எனவே, இந்த சர்ச்சை பற்றி தெளிவான விளக்கத்தை அளிப்பதும், நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதும் ஒழுங்குமுறையான கட்டமைப்பைக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையின் கடமை.