பொது மக்கள் அநாவசியமான நடமாட்டத்தைத் தவிர்த்து கொரோனாத் தாக்கத்திலிருந்து மாவட்டத்தைப் பாதுகாத்துக்கொள்வோம் என யாழ்.வணிகர் கழக சங்கத்தின் தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார்.

கொரோனாத் தாக்கம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனாவின் தாக்கம் அபாயகரமானதாக இல்லை. எனினும் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பதன் மூலமும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலமும் கொரோனாத் தாக்கத்திலிருந்து எங்களை மட்டுமன்றி இந்த மாவட்டத்தையே பாதுகாத்துக்கொள்ளமுடியும்‌. 

நிகழ்வுகள் ஏதும் இடம்பெறுமாயின் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவர்களது அனுமதியுடன் சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் கைகள் கழுவுதல் போன்ற செயற்பாடுகளை தவறாது பின்பற்றி பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும் வர்த்தக நிலையங்களில் போதியளவு பொருட்கள் கையிருப்பிலுள்ளன. முன்டியடித்துக்கொண்டு பொருட்களை கொள்வனவு செய்து சேமிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவையானவர்கள் மட்டும் வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்தல் வேண்டும். 

முகக்கவசம் 15 ரூபா முதல் 25 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. தேவையானவர்கள் வணிகர் கழகத்தில் தொடர்புகொள்வதன் மூலம் இதனைப் பெற்றுக்கொள்ளமுடியும். அது மட்டுமன்றி முகக்கவசம் கைகழுவும் திரவம் போதியளவிலேயே உள்ளதால் தேவைக்கேற்றவிதத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் கொரோனாத் தாக்கத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை தாங்கள் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் இந்த மாவட்டத்தையே பாதுகாத்துக்கொள்ளமுடியும்  என்றார்.