இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகபடா என்ற நகரில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீவிபத்து நேற்று இரவு 8.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது. முதலில் லேசாக பற்றிய தீ, நேரம் செல்ல செல்ல கொழுந்து விட்டு எரிந்துள்ளது. 

இதையடுத்து, அதிகாலை தீ அணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

 தீ விபத்து பாரியளவில் இருந்ததால், பல்பொருள் அங்காடியில் அருகில் இருந்த 55 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த மக்கள்  சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

24 தீ அணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைக்கும் பணியில் சுமார் 250 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அருகாமையில் உள்ள கட்டிடங்களில் வசித்த மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 தீயை அணைக்கும் பணியின் போது தீ அணைப்பு வீரர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.