திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோராளவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை  சேர்ந்த இவர் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி தொடக்கம்  தென்மாகாண முதலமைச்சரின் செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

1991 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி இவர் 1997 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து கணக்காளர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் பின்னர் 1998 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைப்பரீட்சையில் சித்திபெற்று இச்சேவையினுள் இணைந்து கொண்டார்.

சமன் தர்சன பாண்டிகோராள

முதல் நியமனமாக காலி  மாவட்டத்தின் போபே-பொத்தல,அக்மீமன ,ஹபராதுவ ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் பின்னர் தென்மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அதன்பின்னர் தென்மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் பதவி வகித்தார்.தென்மாகாண முதலமைச்சரின் செயலாளராக பதவி வகிக்க முன்னர் தென்மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

காலி ரிச்மன்ட் கல்லூரியின் பழைய மாணவரும் றுஹுனு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான  இவர் எதிர்வரும் 26 ம் திகதி தம் கடமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்கவுள்ளார்.