தமிழர்களில் ஒரு பிரிவினரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு இலங்கையின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக்கதைத் திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து நடிகர் விஜய் சேதுபதியை பின்வாங்கச் செய்துவிட்டது. அவர் நடிப்பதை எதிர்ப்பவர்கள் பிரதானமாக தமிழ்த் திரையுலகையும் தமிழக அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

முரளிதரன் இலங்கை அரசுக்கு எதிராகக் குரலெழுப்பாமல் இனப் படுகொலையை மூடி மறைத்தார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவரது வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாதென்றும் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். முரளிதரன் வேடத்தில் சேதுபதி நடித்தால் அவரது திரையுலக வாழ்க்கைப் பாழாகி ரசிகர்களிடமிருந்து தனிமைப்பட வேண்டி வருமென்றும் அவர்கள் தங்களது எதிர்ப்புக்கு நியாயம் கற்பித்திருக்கிறார்கள்.

திறமையினாலும் மனவுறுதியினாலும் சர்வதேச கிரிக்கெட்டின் இமயத்தின் உச்சியில் ஏறிநின்ற முரளிதரனின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து ஆற்றல் மிக்க நடிகரொருவரை இந்த எதிர்ப்புகள் தடுத்து விட்டன என்பது ஒரு வெட்கக்கேடாகும்.

ஒரு துரோகியென்று குற்றஞ்சாட்டப்படுகின்ற அளவுக்கு சேதுபதி மீது தொடுக்கப்பட்ட நியாயமற்ற - இடையறாத தாக்குதல்களைக் கவனத்தில் எடுத்த முரளிதரன் தனது வாழ்க்கைக்கதைத் திரைப்படத்திலிருந்து விலகுமாறு அவரை வேண்டிக் கொண்டார். இறுதித் தீர்மானம் முரளிதரனுடையதாக இருக்கலாம். ஆனால், தனக்கெதிராகக் கிளம்பிய எதிர்ப்புக்களுக்குப் பிறகு மாத்திரமே அந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கான தனது முடிவை சேதுபதி கைவிட்டார் என்பது முற்றிலும் தெளிவானது.

இந்தத் திரைப்படத்ததைப் பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட அசையும் போஸ்டர் சினிமா ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக முரளிதரனின் உருவத்தைப் பெருமளவுக்கு ஒத்தவராக இருக்கும் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்திருந்தது. முரளிதரன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி கிரிக்கெட் உலகில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைப் படைத்தவர். அதன் காரணத்தினால்தான் அவரது வாழ்க்கைக்கதைத் திரைப்படத்திற்கும் 800 என்று பெயர் வைக்கப்பட்டது. மூன்று தசாப்தங்களாக இலங்கையை சின்னாபின்னப்படுத்திய இன மோதலின் பின்புலத்தில் அவரது எழுச்சியைக் காண்பிப்பதே திரைப்படத்தின் நோக்கம் என்று தெரிகிறது.

கலையுலகைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு இயக்கங்களினால் அடிபணிய வைக்கப்படுவது தமிழ் நாட்டில் ஒன்றும் புதியதல்ல. கலைப் படைப்புக்கள் மீதான சகிப்புத்தன்மை இன்மைக்கு ஒரு பிந்திய உதாரணமாக அமைந்திருக்கும் இந்த சர்ச்சையில் உண்மையான பிரச்சினை தமிழ்நாட்டு அரசியலில் திரும்பத் திரும்ப கிளப்பப்பட்ட பழைய ஒரு சிந்தனை இந்தத் திரைப்படத் தயாரிப்பை நசுக்குவதற்குப் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகும். ஒவ்வொரு தமிழரும் “தமிழ்த் தேசியவாதியாக இருக்கிறாரா” என்ற சோதனையில் தேர்ச்சியடைய வேண்டுமென்பதே அந்த சிந்தனையாகும்.

மெட்ராஸ் கபே என்ற இந்தித் திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் காண்பிக்கப்பட்ட விதத்திற்கு கிளம்பிய எதிர்ப்புக்குப் பிறகு தமிழ்நாடு மாநிலத்தில் அதைத் திரையிட முடியாமல் போனது. 2008 ஆம் ஆண்டில் இலங்கைத் தயாரிப்பாளர் ஒருவர் தனது திரைப்படம் சம்பந்தமான வேலைகளுக்காக சென்னைக்கு வந்திருந்த வேளையில் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்ட பதிவுகள் எல்லாவற்றையும் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டார்.

முரளிதரனின் வாழ்க்கைக்கதைத் திரைப்படத்திலிருந்து சேதுபதியை விலகுமாறு கேட்டவர்களில் சிலர் அவரிடம் தாங்கள் ஒரு வேண்டுகோளை மாத்திரமே விடுத்ததாகக் கூறியிருக்கிறார்கள். கடந்த காலத்தில் அவர் வெளியிட்ட அரசியல் கருத்துக்கள் தமிழ்நாட்டு மக்களின் இலட்சியங்களுக்கு ஆதரவானதாக இருந்த காரணத்தினாலேயே அந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் அவர்கள் கூறினார்கள். அது ஒரு வேண்டுகோளாக இருந்தாலென்ன அச்சுறுத்தலாக இருந்தாலென்ன ஒரு கலைஞனின் தொழில்சார் தீர்மானத்தைக் கைவிடுவதற்கு நெருக்குதல்களைப் பிரயோகிப்பது என்பது சிந்தனையில்லாத ஒரு முடிவேயாகும்.

முரளிதரனின் அரசியல் கருத்துக்களைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் கண்ட வெற்றியை ஆதரிப்பதாகவும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் தாய்மார்களின் கவலையின் பின்னாலுள்ள உண்மையைச் சந்தேகிப்பதாகவும் அவரது சில கூற்றுக்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால், அவர் தனது வாழ்வுடன் வரித்துக்கொண்ட விளையாட்டில் நிகழ்த்திய மகத்தான சாதனைகளை மலினப்படுத்துவதற்கு அது ஒரு காரணமாக இருக்க முடியாது. அவரை எதிர்க்கும் எவரும் திரைப்படம் வெளியான பிறகு அதன் நோக்கம் அல்லது உள்ளடக்கம் குறித்து கேள்வி கேட்பதை எதுவும் தடுக்கவில்லை. வீணான குழப்பம் விளைவிப்பவர்களின் ரத்து அதிகாரம் (வீட்டோ) வெற்றி கண்டிருப்பது துரதிஷ்டவசமானதாகும். 

(த இந்து ஆசிரிய தலையங்கம்)