20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று  பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தும் விதமாக அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்று  20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இரு வாக்கெடுப்பிலும் 08 எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அத்துடன் இவ் இரு வாக்கெடுப்பின் போதும் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, முதலாவது வாக்கெடுப்பு முடிவடைந்த போது, 20 ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்திற்கு தனி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ் வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

இவ் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியிலிருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

1. ஐ.ம.ச. தேசிய பட்டியல் உறுப்பினர் - டயானா கமகே 

2. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் நஸீர் அஹமட் 

3. முஸ்லிம் தேசிய கூட்டணி உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் 

4. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர்  பைசல் காசிம் 

5. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் 

6. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் 

7. ஐ.ம.ச. உறுப்பினர் அரவிந்த் குமார் 

8. ஐ.ம.ச. உறுப்பினர் இஷாக் ரஹ்மான்