(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சுட்டிக்காட்டிய பல விடயங்களில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தவிர்த்து ஏனைய விடயங்களை வெற்றிக் கொண்டுள்ளோம்.

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலிலும், அரச உயர் பதவிகளிலும் பங்குப்பற்றுவதை பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும்,சக்தி வலு அமைச்சர்  உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பயனற்றது .என்பதை நாட்டு மக்கள் அனுபவ ரீதியில் தெரிந்துக் கொண்டார்கள். நிறைவேற்றதிகாரம் மூன்று தரப்பினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமையினால் அரச நிர்வாகம் பலவீனமடைந்தது.

அரசியலமைப்பு திருத்த பலவீனத்தினால் தீவிரவாதம், பாதாள குழு செயற்பாடு தலைதூக்கியது. இதனால் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்குள்ளானது. தேசிய பாதுகாப்பையும்,சிறந்த அரச நிர்வாகத்தையும் கருத்திற்  கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட  20 ஆவது திருத்த வரைபில் தேசிய கணக்காளர் நாயகம் அதிகாரம், அவசர சட்டம் இயற்றல், அமைச்சரவை எண்ணிக்கை ,மற்றும் இரட்டை குடியுரிமை  விவகாரம் ஆகிய ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். என குறிப்பிட்டோம்.

இரட்டை குடியுரிமை விவகாரத்தை  தவிர்த்து ஏனைய ஏற்பாடுகளில் திருத்தம் செய்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு. செலுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இவர் மீது நம்பிக்கை  கொண்டு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு முழுமையாக ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்றுவது பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் சார்பில் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என்றார்.