(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

20ஆவது திருத்தத்தை மனசாட்சியுடன் வாக்களிக்கச்செய்து அனுமதித்துக்கொள்ளவேண்டும். மாறாக பணம், பதவிகளை கொடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரங்களின்போது கொலைகள் இடம்பெறுவதை மாற்றியமைக்கும் நோக்கிலும் அரச துறைகள் சுதந்திரமாக செயற்படும் நோக்கிலும் ஆணைக்குழுக்களை அமைத்தோம். குறிப்பாக தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற 3தேர்தல்களிலும் மரணங்கள் இடம்பெறவில்லை.

ஆனால் 20மூலம் ஆணைக்குழுக்கள் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் தேர்தல் காலங்களில் கொலைகள் இடம்பெறுவதற்கா வழி ஏற்படுத்தப்போகின்றது என கேட்கின்றோம். ஆணைக்குழுக்களில் திருத்தங்கள் தேவையாக இருந்தால் அதனை மேற்கொள்ளலாம். மாறாக ஆணைக்குழுக்களை ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவருவது அவற்றின் சுயாதீனத்தன்மையை இல்லாமலாக்குவதாகும். 

அதனால் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கும்போது அதனை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனசாட்சிக்கு ஏற்று செயற்பட இடமளிக்கவேண்டும். மாறாக பணம், பதவிகளை கொடுத்து உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வது முறையல்ல. அதனால் உறுப்பினர்கள் மனசாட்சியுடன் செயற்பட இடமளிக்கவேண்டும். என்றார்