(செ.தேன்மொழி)

நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்கள் தனிநபர் ஒருவரை இலக்கு வைத்தவையாக இருந்தால் அது எதிர்காலத்தில் சிக்கல்களை தோற்றுவிக்கும். அதனால், நாட்டு மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தியே புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க உட்பட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கூட ஐனாதிபதி தேர்தல் பிரசார காலங்களில் வாக்குறுதிகளை வழங்கிய போதும்  அவர்கள் எவருமே அவர்களது ஆட்சியில் அதனை நிறைவேற்ற வில்லை. 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளும் தரப்பினர் மீண்டும் ஐனநாயகத்திற்கு விரோதமாக அனைத்து அதிகாரங்களையும் ஒரு தனிநபர் கையில் ஒப்படைப்பதற்காக  அரசியலமைப்பு க்கான 20 திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்தில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதனால், 19 ஆவது திருத்தம் காரணமாகவே உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும், ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் சிக்கல்கள் காணப்பட்டதாகவும் , பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறுதின  தாக்குதல்களின் போது பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், இந்த தாக்குதல் 19 ஆவது திருத்தம் காரணமாக இடம்பெற்றதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 19 ஆவது திருத்தம் அமுலில் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருந்தார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கம் செய்வது தொடர்பிலும் சிக்கல்கள் காணப்படுவதாக கூறுவதிலும் நியாயம் இல்லை. பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபரின் பணி நீக்கம் தொடர்பில் அரசியலமைப்பு திருத்தத்தில் தனியாக சட்டங்கள் காணப்படுகின்றன. அரசியலமைப்பு பேரவை மற்றும் ஆணைக்குழுக்களில் அரச்சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை இணைத்துக் கொள்வதற்கு 19 ஆவது திருத்தத்தில் ஏற்பாடுகள் காணப்படுவதாக கூறுகின்றனர்.அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதால் என்ன பாதிப்பு ஏற்பட போகின்றது. நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் மக்களால் தெரிவுச் செய்யப்படும் பிரதிநிதிகளை போன்று ,தொழிற்துறை யினர்,தனியார்துறை யினரும் பங்குக் கொள்ள வேண்டும். அப்போது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பாரிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.